சிறையில் திடீர் நெஞ்சு வலி: நவாஸ் ஷெரீப் மருத்துவமனையில் அனுமதி

திடீர் நெஞ்சுவலி காரணமாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் இஸ்லாமாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Update: 2018-07-30 23:30 GMT
இஸ்லாமாபாத்,

1990-களில், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள அவென்பீல்டு வளாகத்தில் சொகுசு குடியிருப்புகள் வாங்கியது தொடர்பான ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து இஸ்லாமாபாத் பொறுப்புடைமை கோர்ட்டு கடந்த 6-ந் தேதி தீர்ப்பு கூறியது.

இந்த வழக்கில் அவருடைய மகள் மரியம் நவாசுக்கு 7 ஆண்டுகளும், மருமகன் முகமது சப்தாருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் ராவல்பிண்டி நகரில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நவாஸ் ஷெரீப்புக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை பெற மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டுமென நவாஸ் ஷெரீப் தரப்பில் சிறைத்துறை அதிகாரிகளிடம் அனுமதி கோரப்பட்டது.

ஆனால் அதனை ஏற்க மறுத்த அதிகாரிகள் சிறை வளாகத்திற்கு உள்ளேயே அவருக்கு சிகிச்சை வழங்கப்படும் என அறிவித்தனர். அதன்படி மருத்துவர்கள் சிறையிலேயே நவாஸ் ஷெரீப்புக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நவாஸ் ஷெரீப்புக்கு இதயத்துடிப்பில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு நெஞ்சு வலியும் வந்தது. உடனே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கூடுதல் சிகிச்சை தேவைப்படுவதாகவும், எனவே அவரை மருத்துவமனையில் அனுமதிக்கவேண்டும் எனவும் கூறினர்.

முதலில் இதை ஏற்க மறுத்த நவாஸ் ஷெரீப் பின்னர் தனது தனிப்பட்ட மருத்துவர்களின் ஆலோசனையின்பேரில் சிறைக்கு வெளியே சென்று சிகிச்சை பெற ஒப்புக்கொண்டார். மேலும் பஞ்சாப் மாகாண முதல்-மந்திரி ஹசன் அஸ்காரி ரிஸ்வி கூறுகையில், “நவாஸ் ஷெரீப் உடல் நிலையில் நாங்கள் எந்த சிக்கலையும் சந்திக்க விரும்பவில்லை. எனவேதான் அவருக்கு சிறைக்கு வெளியே சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது” என்று குறிப்பிட்டார்.

இதையடுத்து தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள பி.ஐ.எம்.எஸ். மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவரது உடல் நிலையை தீவிரமாக கண் காணித்து வருகின்றனர்.

இதுபற்றி பி.ஐ.எம்.எஸ். மருத்துவமனையின் செய்தி தொடர்பாளர் வாசீம் கவாஜா கூறுகையில், “மருத்துவமனையின் இருதயநோய் சிகிச்சை பிரிவில் நவாஸ் ஷெரீப் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப்பெற்று வருகிறார். அவருடைய உடல் நிலை சீராக உள்ளது. பாதுகாப்புக்காக மருத்துவமனையை சுற்றி போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர்” என்றார்.

அவர் எத்தனை நாள் மருத்துவமனையில் தங்கி இருக்க வேண்டும் என்பதை மருத்துவர்கள் முடிவு செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நீரிழிவு நோயாளியான நவாஸ் ஷெரீப் 2016-ம் ஆண்டு இருதய அறுவை சிகிச்சை செய்துகொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்