நோபல் பரிசு பெற்றவர் ஜெயில் தண்டனை அனுபவித்து வந்த சீன எழுத்தாளர் மரணம்

11 ஆண்டு ஜெயில் தண்டனை அனுபவித்து வந்த, நோபல் பரிசு பெற்ற சீன எழுத்தாளர் மரணம் அடைந்தார்.

Update: 2017-07-13 23:15 GMT

பீஜிங்,

சீனாவை சேர்ந்தவர் லியு ஜியாபோ. 61 வயதான இவர், இலக்கிய விமர்சகர், எழுத்தாளர், மனித உரிமை போராளி, ஜனநாயக ஆர்வலர் என பன்முகத்தன்மை கொண்டவர்.

கடந்த 2008–ம் ஆண்டு, சீனாவில் மனித உரிமை பாதுகாக்கப்பட வேண்டும், அரசியல் அமைப்பு முறையை சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி, ‘சார்ட்டர் 08’ என்று அழைக்கப்படும் மனுவை எழுதினார்.

அதன்மூலம், ஆட்சியை கவிழ்க்க தூண்டினார் என்று குற்றம் சாட்டப்பட்டு, சீன அரசால் கைது செய்யப்பட்டார். அவருக்கு 11 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து, 2009–ம் ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

2010–ம் ஆண்டு, லியு ஜியாபோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. நோபல் பரிசு வழங்கும் விழாவுக்கு கூட அவரை அனுப்ப சீனா மறுத்து விட்டது. அதனால் அவருக்கு பதிலாக, காலி இருக்கை போடப்பட்டு விழா நடத்தப்பட்டது. சீனாவின் பிடிவாதத்துக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

லியுவின் மனைவி லியு ஜியா, 2010–ம் ஆண்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.

இதற்கிடையே, எழுத்தாளர் லியு ஜியாபோவுக்கு கல்லீரல் புற்றுநோய் தாக்கியது. நோயுடன் ஜெயிலில் அவர் அவதிப்பட்டார். வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெற அவர் விரும்பினார். ஆனால், சீன அரசு அதற்கும் அனுமதி அளிக்கவில்லை.

கடந்த மே மாத இறுதியில், புற்றுநோய் முற்றிய நிலையில், ஷென்யாங் நகரில் உள்ள சீன மருத்துவ பல்கலைக்கழக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக, கடந்த 8–ந்தேதி, அமெரிக்காவில் இருந்தும், ஜெர்மனியில் இருந்தும் தலா ஒரு புற்றுநோய் சிகிச்சை நிபுணரை சீன அரசு வரவழைத்தது. அந்த நிபுணர்கள், லியு ஜியாபோ உடல்நிலையை பரிசோதித்து விட்டு, அவரை தங்கள் நாட்டுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிப்பது பாதுகாப்பானது என்று பரிந்துரைத்தனர். ஆனால், அதை சீன அரசு ஏற்கவில்லை.

அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும், அவரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு வலியுறுத்தின. ஆனால், அவருக்கு சீனாவின் பிரபலமான புற்றுநோய் நிபுணர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும், தங்கள் நாட்டு உள்விவகாரத்தில் மற்ற நாடுகள் தலையிட வேண்டாம் என்றும் சீன அரசு திட்டவட்டமாக கூறிவிட்டது.

இந்த சூழ்நிலையில், எழுத்தாளர் லியு ஜியாபோ நேற்று காலமானார். ஒரு மாதத்துக்கு மேல ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற நிலையில், அவரது உயிர் பிரிந்தது.

இதுகுறித்து ஷென்யாங் நகர சட்டத்துறை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பலவிதமான சிகிச்சை அளித்தும் லியு ஜியாபோவின் உடல்நிலை தொடர்ந்து மோசமாகவே இருந்தது. அவரது உடல் உறுப்புகள் செயலிழந்து விட்டன. அவரை காப்பாற்ற மேற்கொண்ட முயற்சிகள் தோற்று விட்டன’ என்று கூறியுள்ளது.

மேலும் செய்திகள்