அமெரிக்காவில் கார் விற்பனை மையத்தில் விமானம் விழுந்து தீப்பிடித்தது: 2 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் கார் விற்பனை மையத்தில் விமானம் விழுந்து தீப்பிடித்த விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர்.;

Update:2022-10-20 00:28 IST

வாஷிங்டன்,

அமெரிக்காவின் ஓகியோ மாகாணம் மரியெட்டா நகரில் பழைய மற்றும் புதிய கார்களை விற்பனை செய்யும் விற்பனை மையம் உள்ளது. இந்த விற்பனை மையத்தில் கார்கள் நிறுத்தும் இடத்தில் 100-க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை இந்த கார் விற்பனை மையத்துக்கு மேலே பறந்து கொண்டிருந்த சிறிய ரக விமானம் ஒன்று திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து கார்கள் நிறுத்தும் இடத்தில் விழுந்தது.

கார்கள் மீது மோதிய வேகத்தில் விமானத்தில் தீப்பற்றியது. அதை தொடர்ந்து அடுத்தடுத்து கார்களிலும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணித்த விமானி உள்பட 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். இந்த விபத்தில் கார் விற்பனை மையத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் விற்பனைக்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஏராளமான கார்கள் தீக்கிரையாகின.

Tags:    

மேலும் செய்திகள்