லிபியாவில் ஆயுத கும்பலால் சிறை பிடிக்கப்பட்ட 17 இந்தியர்கள் பாதுகாப்பாக மீட்பு

லிபியாவில் ஆயுத கும்பலால் பணய கைதிகளாக சிறை பிடிக்கப்பட்ட 17 இந்தியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர்.

Update: 2023-08-21 10:16 GMT

திரிபோலி,

இந்தியாவில் இருந்து வேலை தேடி கடந்த பிப்ரவரியில் சிலர் வெளிநாட்டுக்கு சென்றனர். இத்தாலி நாட்டில் வேலை என ஆசை காட்டி, டிராவல் ஏஜென்டுகளின் உதவியுடன் அழைத்து செல்லப்பட்ட அவர்கள் அனைவரும் பின்னர் மோசடிக்கு ஆளானார்கள்.

லிபியா நாட்டில் கைவிடப்பட்ட 17 இந்தியர்களும் அந்நாட்டில் சுற்றி திரிந்து, தவித்தபோது, ஜ்வரா நகரில் வைத்து ஆயுதமேந்திய கும்பலால் கடத்தி செல்லப்பட்டனர்.

இதுபற்றிய தகவல் தெரிந்ததும், அவர்களின் குடும்பத்தினர் உடனடியாக, லிபியாவை கவனித்து வரும் துனிசியா நாட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டனர். தங்களுடைய உறவினர்களை மீட்டு தரும்படி கோரிக்கை விடுத்தனர்.

கடந்த மே மாதத்தில் இருந்து மாபியா கும்பலால், இந்தியர்கள் பணய கைதிகளாக சிறை பிடிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் அனைவரும் பஞ்சாப் மற்றும் அரியானாவை சேர்ந்தவர்கள் ஆவர்.

இதனை தொடர்ந்து இந்திய தூதரகம் அவர்களை மீட்கும் பணியில் தீவிரத்துடன் ஈடுபட்டது. இதன் தொடர்ச்சியாக, இந்தியர்கள் 17 பேரும் லிபியாவில் இருந்து சொந்த நாட்டுக்கு பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டனர்.

அவர்கள் நேற்று மாலை டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். மீட்கப்பட்ட பின்னர், அவர்களுக்கு போதிய உணவு அல்லது தண்ணீர் தரப்படவில்லை என்பதும் அவர்கள் காயமடைந்து இருந்ததும் தெரிய வந்தது.

இந்தியாவில் இருந்து துபாய்க்கு கொண்டு செல்லப்பட்ட அவர்கள் பின்னர் லிபியாவில் விடப்பட்டனர். சட்டவிரோத வகையில் அவர்களின் இந்த பயணம் அமைந்திருந்தது என தேசிய சிறுபான்மையினர் கமிட்டி தெரிவித்து இருந்தது.

லிபியாவில் இந்திய தூதரக அதிகாரிகள் முயற்சியால், உணவு, மருந்து, ஆடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டன. பின்னர், பாஸ்போர்ட் இல்லாத சூழலில், அவர்களுக்கு அவசரகால சான்றிதழ்கள் வழங்கப்பட்டு, இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்