அமெரிக்க அதிபர் பைடனுடன் ஜப்பான் பிரதமர் வரும் 13-ந்தேதி சந்திப்பு

அமெரிக்க அதிபர் பைடனை வெள்ளை மாளிகையில் வைத்து ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா வரும் 13-ந்தேதி சந்தித்து பேசுகிறார்.

Update: 2023-01-04 07:33 GMT



வாஷிங்டன்,


ஆசிய நாடுகளில் ஒன்றான ஜப்பான் நாடு, தென்கொரியா, அமெரிக்காவுடன் நட்பு ரீதியிலான தொடர்பு கொண்டுள்ளது. எனினும், மறுபுறம் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பானை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

கடந்த 1-ந்தேதி ஜப்பானை நோக்கி குறுகிய தூர பாலிஸ்டிக் ரக ஏவுகணையை ஏவி சோதித்தது வடகொரியா. இதனை தொடர்ந்து நடந்த ஆளும் தொழிலாளர் கட்சியின் கூட்டத்தில் பேசிய வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன், நாட்டின் அணு ஆயுத உற்பத்தியை அதிவேகத்தில் அதிகரிக்க உத்தரவிட்டார். இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நீடிக்கிறது.

இந்த சூழலில், அமெரிக்க அதிபர் பைடனை வெள்ளை மாளிகையில் வைத்து ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா வருகிற 13-ந்தேதி நேரில் சந்தித்து பேசுகிறார்.

இதனையொட்டி, வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவின் வருகையை அதிபர் பைடன் எதிர்நோக்கி காத்து இருக்கிறார். இந்த சந்திப்பில் எங்களுடைய இரு அரசாங்கங்கள், பொருளாதார விவகாரங்கள் மற்றும் நாட்டு மக்களின் உறவுகளை ஆழப்படுத்துவதற்கான ஆலோசனை நடத்த உள்ளனர்.

இந்த சந்திப்பில் இரு தலைவர்களும், சர்வதேச அளவில் நிலவி வரும் பருவநிலை மாற்றம், வடகொரியா, சீனாவை சுற்றி நிலவும் பாதுகாப்பு தொடர்புடைய விவகாரங்கள், உக்ரைன் மீது படையெடுத்து உள்ள ரஷியா உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி ஆலோசனை நடத்த உள்ளனர் என்று வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.

கடந்த கோடை காலத்தில் உச்சி மாநாடு ஒன்றில் பைடனை சந்தித்து பேசிய கிஷிடா, தைவான் தீவை மீண்டும் எடுத்து கொள்ளும் சீனாவின் நோக்கம் ஒரு புதிய மோதலை ஏற்படுத்த கூடும் என்று எச்சரிக்கை தெரிவிக்கவும் செய்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்