ஆன்லைன் நண்பரை சந்திக்க தந்தையின் காரை திருடி சென்ற 12 வயது சிறுமி; ஆனால்...

அமெரிக்காவில் ஆன்லைனில் பழக்கம் ஏற்பட்ட நபரை சந்திக்க தந்தையின் காரை 12 வயது சிறுமி திருடி கொண்டு, ஓட்டி சென்றபோது அது நடந்தது.

Update: 2023-04-11 11:00 GMT

புளோரிடா,

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் யூனியன் கவுன்டி பகுதியை சேர்ந்த சிறுமி ஜேட் கிரிகோரி (வயது 12). லூசியானா பகுதியை சேர்ந்த நபர் ஒருவரை ஆன்லைன் வழியே ஜேட் நட்பு கொண்டு உள்ளார். தொடர்ந்து, அவருடன் சாட்டிங்கிலும் ஈடுபட்டு உள்ளார்.

அவரை ரொம்ப பிடித்து போக, அந்த நபரை நேரில் சந்திக்க சிறுமி முடிவு செய்து உள்ளார். இதற்காக தனது தந்தையின் போர்டு ரக கார் ஒன்றை திருடி கொண்டு, அடையாளம் தெரியாத நபரை காண லூசியானாவுக்கு புறப்பட்டு உள்ளார்.

தோழியான குளோ லார்சன் (வயது 14) என்பவரையும் தன்னுடன் அழைத்து கொண்டு சென்றுள்ளார். திடீரென அவர்கள் இருவரும் காணாமல் போன சூழலில், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்தது.

அந்த சிறுமிகளின் புகைப்படங்கள், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டும், விளம்பர பலகைகளில் ஒட்டப்பட்டும் தேடல் நடவடிக்கை தொடர்ந்தது.

ஆனால், சிறுமி கெயின்ஸ்வில்லே பகுதியில் இருந்து தனது தந்தையின் காரை 400 கி.மீ. தொலைவுக்கு ஓட்டி கொண்டு, 5 மணிநேரம் பயணித்து உள்ளார்.

அப்போது, அலபாமா மாகாணத்தில் கடை ஒன்றில் நிற்கும்போது தங்களது புகைப்படங்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது பற்றி பார்த்து இருவரும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இதனால், உள்ளூர் போலீசாரை அணுகுவது என அவர்கள் முடிவு செய்து உள்ளனர்.

ஆனால் ஊடகத்தில் வெளியான செய்தியில், இந்த சிறுமிகள் யாரை சந்திக்க புறப்பட்டு சென்றுள்ளனர் என போலீசார் விசாரணை நடத்தியதில், பாலியல் கடத்தல் கும்பலை சேர்ந்த நபரால் கவரப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். எனினும், சிறுமிகள் இருவரும் பாதுகாப்பாக வீடு வந்து சேர்ந்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்