சூடானில் விளையாடி கொண்டிருந்தபோது குண்டு வெடித்து 11 சிறுவர்கள் பரிதாப சாவு

சூடானில் விளையாடி கொண்டிருந்தபோது குண்டு வெடித்து 11 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2023-03-18 17:05 GMT

மர்ம பொருள் வெடித்தது

வட கிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானின் பாகர் அல் ஹசால் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு மர்ம பொருள் அருகே கிடந்தது. இதனை பார்த்த சிறுவர்கள் அதனை தங்களது கையில் எடுத்து விளையாட ஆரம்பித்தனர்.

அப்போது அந்த மர்ம பொருள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனை கேட்ட அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி சென்று பார்த்தனர். அப்போது விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

11 சிறுவர்கள் சாவு

இதனையடுத்து அவர்களை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அதில் 11 சிறுவர்கள் செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். ஒரு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் சிறுவர்கள் கையில் வைத்திருந்த மர்ம பொருள் உள்நாட்டு போரின் போது வீசப்பட்ட வெடிக்காத சக்திவாய்ந்த வெடிகுண்டு என்பதும், அதனை அறியாத சிறுவர்கள் கையில் வைத்து விளையாடியதால் இந்த விபரீதம் ஏற்பட்டதும் தெரிய வந்தது.

சோகத்தில் மூழ்கிய கிராமம்

விளையாட சென்ற இடத்தில் குண்டு வெடித்து 11 சிறுவர்கள் பலியான சம்பவம் அந்த கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. சூடானில் கடந்த 2013-ல் உள்நாட்டு போர் தொடங்கியது. தொடர்ந்து 5 ஆண்டுகள் நீடித்த இந்த போரில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இந்த காலகட்டத்தில் ஏராளமான வெடிகுண்டுகள் அங்கு வீசப்பட்டன. அந்த வெடிகுண்டுகள் வெடித்து அவ்வப்போது இது போன்ற கொடூர சம்பவங்கள் அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்