தலீபான்கள் ஆட்சி: ஈரானில் ஆப்கானிய குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை 20 மடங்கு உயர்வு
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சிபொறுப்பேற்ற பின்பு ஈரானில் ஆப்கானிய குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை 20 மடங்கு உயர்ந்து உள்ளது.;
காபூல்,
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்டு 15ந்தேதி தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இதனை தொடர்ந்து, அந்நாட்டில் பெண்கள், அரசு அதிகாரிகள் உள்பட பல்வேறு தரப்பினருக்கு தலீபான்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.
அந்நாட்டின் பொருளாதார சூழ்நிலையும் மிகவும் மோசமடைந்து வருகிறது. அதேவேளை, தலீபான்கள் ஆட்சியில் பல்வேறு தாக்குதல் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள், தலீபான்கள் ஆட்சிக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.
இந்த தாக்குதலுக்கு பொதுமக்கள் இலக்காகி வருகின்றனர். கடந்த மார்ச்சில் வெளியிடப்பட்ட ஐ.நா. அறிக்கையின்படி, ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்னர் நடைபெற்ற தாக்குதல்களில் பொதுமக்கள் சுமார் 400 பேர் உயிரிழந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல்கள் பெரும்பாலும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஈரான் நாட்டில் இருந்து செயல்படும் மனித உரிமைகள் ஆர்வலர்கள் அந்நாட்டு ஊடகத்திடம் கூறும்போது, ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் பொறுப்பேற்ற பின்பு ஈரானில் ஆப்கானிய குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை 20 மடங்கு உயர்ந்து உள்ளது என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளனர்.
இதுபற்றி ஈரானின் மனித உரிமைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான நீதி துறை துணை மந்திரி படா அகமதி கூறும்போது, ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பின்னர், பல குடும்பங்கள், தங்களது குழந்தைகளுடன் அந்நாட்டில் இருந்து வெளியேறி ஈரானுக்கு இடம் பெயர வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
குடும்பத்தினரின் நிச்சயமற்ற சூழலால் அந்த குழந்தைகள் பணிக்கு அமர்த்தப்படுகின்றனர். குழந்தை தொழிலாளர்களாக தள்ளப்படும் நிலைக்கு அவர்கள் ஆளாகின்றனர் என தெரிவித்து உள்ளார்.