4-ம் மண்டலத்திற்கு கூடுதலாக தண்ணீர் வழங்க வேண்டும்

வறட்சியால் கடைமடை வரை தண்ணீர் செல்வதில் சிரமம் உள்ளதால் 4-ம் மண்டலத்திற்கு கூடுதலாக தண்ணீர் வழங்க வேண்டும் என்று திருமூர்த்தி நீர்த்தேக்க திட்டக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;

Update: 2023-10-10 19:30 GMT

திருமூர்த்தி அணையில் இருந்து 4-ம் மண்டல பாசனத்திற்கு உயிர் தண்ணீராக ஒரு சுற்று தண்ணீரின் கால நீட்டிப்பு மற்றும் கூடுதல் தண்ணீர் கேட்பது குறித்து திருமூர்த்தி நீர்த்தேக்க திட்டக்குழு கலந்தாய்வு கூட்டம் நேற்று பொள்ளாச்சி பி.ஏ.பி. அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திட்டக்குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம் தலைமை தாங்கினார். சிறப்பு தலைமை பொறியாளர் தாமோதரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் திட்டக்குழு உறுப்பினர்கள், செயற்பொறியாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக கூட்டத்தில் இந்த ஆண்டு கடும் வறட்சி நிலவுவதை கருத்தில் கொண்டு திருமூர்த்தி அணையில் இருந்து 4-ம் மண்டல பாசனத்திற்கு ஒரு சுற்று தண்ணீர் வழங்க முடிவு செய்யப்பட்டு கடந்த 20-ந்தேதி முதல் இன்று (புதன்கிழமை) வரை 2 ஆயிரம் மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்க அரசாணை பெறப்பட்டது. இதற்கிடையில் தண்ணீர் பாசன நிலங்களை அடைவதற்கு முன்பே பி.ஏ.பி. பிரதான கால்வாயில் கடந்த 22-ந்தேதி தண்ணீர் படிப்படியாக குறைக்கப்பட்டு தண்ணீர் கசிவு சீரமைக்கப்பட்டது.


மீண்டும் 23-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், கடந்த 3-ந்தேதி கால்வாயின் 26-வது கிலோ மீட்டர் தூரத்தில் உடைப்பு ஏற்பட்டது. பின்னர் சீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு 5-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதுபோன்ற காரணங்களால் அரசாணையில் பெறப்பட்ட அளவு தண்ணீரை பாசன காலத்திற்குள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அரசாணையில் பெறப்பட்ட மீதமுள்ள தண்ணீரை பயன்படுத்த வருகிற 17-ந்தேதி வரை காலநீட்டிப்பு செய்ய வேண்டும். இதற்கிடையில் கால்வாய் உடைப்பால் பாசன நிலங்களுக்கு சரிவர தண்ணீர் செல்லாமல் வீணாகி விட்டது.

மேலும் கடும் வறட்சி நிலவுவதால் கடைமடை வரை தண்ணீர் கொண்டு செல்ல மிகவும் சிரமம் இருப்பதால் 4-ம் மண்டல பாசன நிலங்களுக்கு கூடுதலாக தண்ணீர் வழங்க வேண்டும். 4-ம் மண்டல பாசனத்தில் முதல் சுற்று தண்ணீர் முடிவடைந்தவுடன் தொகுப்பு அணைகளில் இருக்கும் நீர்இருப்பு மற்றும் எதிர்பார்ப்பு நீர் ஆகியவற்றை கருத்தில் கொண்டு 2-வது சுற்று தண்ணீர் வழங்குவது குறித்து முடிவு செய்யலாம். பாலாறு படுகையில உள்ள அனைத்து கால்வாய்களிலும் உள்ள மதகுகளை ஆய்வு செய்து ஆயக்கட்டு பரப்பளவுக்கு தகுந்தவாறு குழாய்களை மாற்றி அமைக்க நீர்வளத்துறை அதிகாரிகளை கேட்டுக் கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்