நகராட்சிகளின் மண்டல நிர்வாக என்ஜினீயர் ஆய்வு
ஆற்காடு நகராட்சி கட்டிடங்களை நகராட்சிகளின் மண்டல நிர்வாக என்ஜினீயர் ஆய்வு செய்தார்.
ஆற்காடு பஸ் நிலையம் எதிரில் உள்ள ஏ.ஜி.ஆர். கட்டிடம், காந்தி கட்டிடம், மாங்காய் மண்டி அதேபோல் ஆற்காட்டில் இருந்து ஆரணி செல்லும் சாலை பகுதியில் உள்ள தாய் சேய் நல மருத்துவமனை ஆகிய கட்டிடங்கள் பழுதடைந்துள்ளதால் அதனை இடித்து விட்டு புதியதாக கட்டிடங்கள் கட்ட நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார். இதனை ஏற்று அந்த கட்டிடங்களை இடித்து விட்டு, புதிதாக கட்டிடம் கட்டுவதற்காக ரூ.3 கோடியே 40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தாய் சேய் நல மருத்துவமனையில் உள்ள பழைய கட்டிடங்களை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட ரூ.1 கோடியே 25 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து நேற்று இந்த கட்டிடங்களை நகராட்சிகளின் மண்டல நிர்வாக என்ஜினீயர் ரூபன் சுரேஷ் பொன்னையா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன், நகராட்சி பொறியாளர் கணேசன், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பி.பென்ஸ் பாண்டியன் உள்பட பலர் உடன் இருந்தனர்.