காஞ்சீபுரத்தில் வாலிபர் கொலை:காரில் தப்பிய 2 பேரை மடக்கி பிடித்த போலீஸ்;விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் பரபரப்பு
காஞ்சீபுரத்தில் நடந்த கொலை சம்பவத்தில் விக்கிரவாண்டி வழியாக காரில் தப்பிச்செல்ல முயன்ற 2 பேரை விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் போலீசார் மடிக்கி பிடித்தனர்.;
விக்கிரவாண்டி,
வாலிபர் கொலை
காஞ்சீபுரம் மாவட்டம் திம்பராஜன் பேட்டை கிராமத்தை சேர்ந்தவர்கள் பொன்னம்பலம் மகன் குமரன் (வயது 22), பாரதி மகன் விக்னேஷ் (21). இவர்களுக்கும், வெண்குடி கிராமத்தை சேர்ந்த பாஸ்கர் மகன் அஜித் (22) என்பவருக்கும் கஞ்சா விற்பது, மாமுல் வாங்குவது தொடர்பாக முன் விரோதம் இருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் வெண்குடி கிராமத்திற்கு குமரன், விக்னேஷ் ஆகியோர் சென்றனர். பின்னர், அங்கு நின்று கொண்டிருந்த அஜித்தை சரமாரியாக தாக்கி, அவரது தலையை கத்தியால் துண்டாக வெட்டினர். இதையடுத்து தலையை அப்பகுதியில் உள்ள சிவன் கோவிலில் வைத்துவிட்டு அங்கிருந்து புதுக்கோட்டை நோக்கி காரில் தப்பிச் சென்றனர். இதுபற்றி காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய்க்கு தகவல் தெரிவித்தார்.
மடக்கி பிடித்தனர்
இதையடுத்து விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தலைமையில் விக்கிரவாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரைராஜ், காத்தமுத்து மற்றும் போலீசார் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் நேற்று காலை 10 மணி அளவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அநத வழியாக காாில் வந்த குமரன், விக்னேஷ் ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்தனர். தொடர்ந்து அவர்களிடம் இருந்து கத்தி, ஹெல்மெட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
பின்னர் காஞ்சீபுரம் போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் இருவைரயும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாலாஜாபாத் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துசென்று, ஒப்படைத்தனர்.