விழுப்புரத்தில் மின்னல் தாக்கி வாலிபர் பலி

விழுப்புரத்தில் மின்னல் தாக்கி வாலிபர் உயிரிழந்தாா்.

Update: 2022-08-22 16:59 GMT


விழுப்புரம் முத்தோப்பு மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் முகமது உசேன் மகன் ரியாஸ் என்கிற ஆதம் (வயது 24). இவர் 10-ம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு விழுப்புரம் புதிய பஸ் நிலையம் பகுதியில் சமோசா விற்பனை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மழை பெய்து கொண்டிருந்த நிலையில், இவர் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு துணிக்கடை எதிரில் நின்றுகொண்டு தனது நண்பர் ஆதி என்பவருடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் ரியாஸ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரியாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்