மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
ஆலங்குளம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார்.;
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே மாறாந்தை கிராமத்தில் பாப்பாத்தி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தற்போது கும்பாபிஷேக விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி நெல்லை சந்திப்பு மேகலிங்கபுரம் பகுதியை சேர்ந்த 4 பேர் நேற்று முன்தினம் இரவு கோவிலுக்கு வந்து பூஜை செய்துள்ளனர். பின்னர் 4 பேரும் நேற்று சாப்பிடுவதற்காக அதே ஊரை சேர்ந்த திருமலை குமார் என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அவர்களில் ஒருவரான விஸ்வநாதன் மகன் பாலசுப்பிரமணியம் (வயது 18) என்பவர் அருகில் இருந்த மின்விசிறியை போட்டுள்ளார்.
அப்போது அதில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே பாலசுப்பிரமணியம் மயங்கி விழுந்தார். உடனே அவரை மீட்ட உறவினர்கள் சிகிச்சைக்காக ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு பாலசுப்பிரமணியத்தை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார் பாலசுப்பிரமணியத்தின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.