இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் தீப்பந்தம் ஏந்தி பேரணி
நெல்லையில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் தீப்பந்தம் ஏந்தி பேரணி சென்றனர். இதில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டார்.;
நெல்லையில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் தீப்பந்தம் ஏந்தி பேரணி சென்றனர். இதில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டார்.
தீப்பந்தம் ஏந்தி பேரணி
நெல்லை சந்திப்பு ரெயில்நிலையம் காமராஜர் சிலை முன்பு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் மத்திய அரசை கண்டித்து தீப்பந்தம் ஏந்தி போராட்டம் மற்றும் பேரணி நடந்தது.
சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு, பேரணியை தொடங்கி வைத்தார்.
ஜனநாயக படுகொலை
முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறும் போது, ராகுல்காந்தியின் எம்.பி. பதவியை பறித்த மத்திய அரசை கண்டித்து இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது மிகப்பெரிய ஜனநாயக படுகொலை. இதற்கு எதிராக மக்கள் போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டம் தொடரும். மத்திய அரசை தீக்கு இரையாக்குவதற்காக இந்த தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சந்திப்பு ரெயில்நிலையம் முன்பு இருந்து பேரணியாக சென்று சந்திப்பு பஸ் நிலையம் வரை சென்றனர்.
மகிளா காங்கிரஸ்
மேலும் ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து மகிளா காங்கிரஸ் சார்பில் வண்ணார்பேட்டை மேம்பாலத்தின் கீழ் போராட்டம் நடந்தது.
சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டார். இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
இந்த போராட்டங்களில் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் போத்திராஜ் வினோத், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஓ.பி.சி. அணி துணை தலைவருமான வக்கீல் காமராஜ், மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் ஸ்டெல்லா மேரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.