வந்தவாசி அருகே வாலிபர் எரித்துக்கொலை
வந்தவாசி அருகே கொடுக்கல்-வாங்கல் தகராறில் வாலிபர் எரித்துக்கொலை செய்யப்பட்டார்.;
வந்தவாசி
வந்தவாசி அருகே கொடுக்கல்-வாங்கல் தகராறில் வாலிபர் எரித்துக்கொலை செய்யப்பட்டார்.
எலும்புக்கூடு
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த சு.நாவல்பாக்கம் கிராமம் அருகே உள்ள குளத்தில் எரிந்த நிலையில் எலும்புக்கூடுகள் இருப்பதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தெள்ளார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் அங்கு சென்று ஆங்காங்கே கிடந்த எலும்புக்கூடுகளை சேகரித்தனர். மேலும் அங்கு இருந்த கடை சாவி மற்றும் இருசக்கர வாகன சாவி ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் எரிந்த நிலையில் எலும்புக்கூடாக கிடந்தவர் வந்தவாசியை அடுத்த நல்லூர் கிராமத்தை சேர்ந்த மளிகை கடை வியாபாரி ஏழுமலையின் மகன் விஜய் (வயது 22) என்பதும், கடந்த 15 நாட்களுக்கு முன்பு மாயமானதும் தெரியவந்தது.
3 பேர் சிக்கினர்
இதுதொடர்பாக போலீசார் சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், கொடுக்கல்-வாங்கல் தகராறில் விஜய்யை எரித்து கொலை செய்துவிட்டு அவருடைய இருசக்கர வாகனத்தை அருகே உள்ள கிணற்றில் தள்ளிவிட்டு சென்றதும் தெரியவந்தது.
இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இருந்து இருசக்கர வாகனத்தை வெளியே எடுத்தனர். மேலும் இதுதொடர்பாக ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நல்லூரில் மேற்கொண்டு எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.