எடப்பாடி அருகே விவசாயி வீட்டில் திருடிய வாலிபர் கைது போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்

எடப்பாடி அருகே விவசாயி வீட்டில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் கிடைத்துள்ளது.

Update: 2022-10-11 22:28 GMT

எடப்பாடி

விவசாயி வீட்டில் திருட்டு

எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி அருகே உள்ள பில்லுக்குறிச்சி கிராமம். இங்குள்ள ஆசாரிக்காடு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 38). விவசாயி. இவருடைய மனைவி சிவகாமி. இந்த நிலையில் கடந்த மாதம் 29-ந் தேதி கோவிந்தராஜ் தனது மனைவி சிவகாமியுடன் மேச்சேரி பகுதியில் உள்ள தனது உறவினரின் வீட்டு துக்க நிகழ்ச்சிக்காக சென்றிருந்தார்.

பின்னர் மாலை வீடு திரும்பிய போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 30 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதனால் அதி்ர்ச்சி அடைந்த கோவிந்தராஜ், இது குறித்து பூலாம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.

கைது

அதன் பேரில் சங்ககிரி துணை சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து மர்ம நபர்களை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் மேட்டூர் பகுதியில் சுற்றித்திரிந்த நபரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் பிடிபட்ட நபர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பன்னத்தூர் கிராமம், பட்டாளத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகேசன் மகன் கார்த்தி என்கிற கார்த்திகேயன் (25) என்பதும், இவர் தனது நண்பரான திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (30) என்பவருடன் சேர்ந்து, கோவிந்தராஜ் ராஜ் வீட்டில் திருடியதும் தெரியவந்தது.

டிராக்டர்

தொடர்ந்து போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன. கார்்த்திகேயன் ஏற்கனவே ஒரு வழக்கில் சிறையில் இருந்த போது, திருப்பத்தூர் பகுதிைய சேர்ந்த சக்திவேலுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் சேர்ந்து பெரிய அளவில் கொள்ளை அடிக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக பழனி கோவிலுக்கு சென்ற அவர்கள் இருவரும் அங்கு ஒரு நாள் தங்கி இருந்து, பின்னர் ஈரோடு திரும்பி உள்ளனர். ஈரோட்டில் ஒரு இருசக்கர வாகனத்தை திருடிய அவர்கள் அங்கிருந்து மேட்டூர் ெசல்லும் வழியில், பில்லுக்குறிச்சி பகுதியில் பூட்டி இருந்த கோவிந்தராஜ் வீட்டில் திருட முடிவு செய்தனர்.

இதற்காக அருகில் உள்ளவர்களிடம் வீட்டின் முன் இருந்த டிராக்டரை காண்பித்து, தாங்கள் அதை வாடகைக்கு எடுக்க வந்திருப்பதாகவும், இதன் உரிமையாளர் எங்கே சென்றுள்ளார் என விசாரித்து தெரிந்து கொண்டவர்கள், டிராக்டரை சுற்றி பார்ப்பது போல் பார்த்து, நைசாக வீட்டின் கதவை உடைத்து அங்கு பீரோவில் இருந்த நகைகளை திருடிச்சென்றது தெரியவந்தது.

13 பவுன் நகை மீட்பு

கார்த்திகேயன் மீது ஏற்கனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 7-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், இதனால் அவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் தண்டனை பெற்று சிறை சென்றவர் எனவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து அவரிடமிருந்து 13 பவுன் தங்க நகை மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளை போலீசார் மீட்டனர். மேலும் போலீசார் தலைமறைவாக உள்ள சக்திவேலை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்