ராமநாதபுரத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜன் (வயது 52). இவர் ராமநாதபுரம் கண்ணகி நகர் 2-வது தெருவில் பழைய இரும்பு கடை வைத்துள்ளார். இவர் நேற்று முன்தினம் வழக்கம்போல் கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். அந்த கடைவழியாக கோவிந்தராஜனின் நண்பரான பாண்டித்துரை என்பவர் பணி முடிந்து வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது கோவிந்தராஜனின் இரும்பு கடை திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். கோவிந்தராஜன் விரைந்து வந்து பார்த்தபோது, கடையை உடைத்து உள்ளே புகுந்து மர்ம நபர் 21 கிலோ காப்பர் கம்பியை திருடிச்சென்றது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.20 ஆயிரம் ஆகும். இதனால் அதிர்ச்சி அடைந்த கோவிந்தராஜன் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசில் புகார் செய்தார்.
போலீசார் விரைந்து வந்து விசாரணை செய்தனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்தபோது ஒருவர் திருடிச்செல்வது தெரிந்தது. அந்த நபரை கண்ட கோவிந்தராஜன் தன் கடையில் இதற்கு முன் வேலை பார்த்த திருவள்ளுவர்நகர் குப்பை கிடங்கு பகுதியை சேர்ந்த பாலமுருகன் (34) என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.