ஓமலூர்:-
ஓமலூரை அடுத்த பண்ணப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன். இவருடைய மனைவி சிவகாமி (வயது 65). இவர்கள் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு உள்ள வீட்டில் வசித்து வரும் இவர்கள், முன்புறம் ஜெராக்ஸ் கடை வைத்துக்கொண்டு வீட்டின் பின்பகுதியில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 2-ந் தேதி சிவகாமி ஜெராக்ஸ் கடையில் இருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் ஜெராக்ஸ் எடுப்பது போல் நடித்து சிவகாமியின் கழுத்தில் அணிந்திருந்த 10½ பவுன் தாலி சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து சிவகாமி தீவட்டிப்பட்டி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் நேற்று தனிப்படை போலீசார் சிவகாமியிடம் நகை பறிப்பில் ஈடுபட்டது, போச்சம்பள்ளி வேலம்பட்டி பகுதியை சேர்ந்த சுரேஷ் (30) என்பதை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர். மேலும் அவர் திருடிச்சென்ற 10 ½ பவுன் தாலிசங்கிலியை போலீசார் மீட்டனர்.