கந்தம்பாளையத்தில் சாலை தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

கந்தம்பாளையத்தில் சாலை தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி;

Update: 2023-07-19 19:00 GMT

கந்தம்பாளையம்:

கந்தம்பாளையத்தில் சாலையோரம் இருந்த சாலை தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார்.

வாலிபர்

நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அருகே உள்ள சோழசிராமணி பச்சாகவுண்டன் வலசு பகுதியை சேர்ந்தவர் செல்வம். லாரி டிரைவர். இவருடைய மகன் பிரகாஷ் (வயது 25). திருமணமாகவில்லை. இவர் பாலிடெக்னிக் கல்லூரியில் இ.சி.இ. முடித்துவிட்டு தந்தையுடன் லாரியில் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பிரகாஷ் மோட்டார் சைக்கிளில் தனது நண்பர்களை பார்க்க சென்றார். இதற்கிடையே கந்தம்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே போலீசார் மூலம் சாலை தடுப்பு (பேரிகாடு) வைக்கப்பட்டிருந்தது.

சோகம்

தனது நண்பர்களை பார்த்துவிட்டு திரும்பி வந்தபோது தனியார் மண்டபம் அருகே வைக்கப்பட்டிருந்த சாலை தடுப்பில் பிரகாஷ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த அவர் உயிருக்கு போராடினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே பிரகாஷ் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்த அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் பச்சாகவுண்டன் வலசு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்