இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை;

Update: 2023-06-06 18:45 GMT

கோவை

கோவையில் காதலன் வெட்டிக்கொல்லப்பட்டதால், மனவருத்தம் அடைந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

காதலன் வெட்டிக்கொலை

கோவை சுந்தராபுரம் காந்திநகரை சேர்ந்தவர் விஜயகுமார். இவருடைய மகன் பிரசாந்த் (வயது21) லோடுமேன்.

இவர் செட்டிப்பாளையம் அருகே உள்ள மயிலாடும்பாறையை சேர்ந்த 18 வயது இளம்பெண்ணை காதலித்தார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இந்த காதலுக்கு பெண்ணின் பெற்றோர் ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் சம்மதம் தெரிவித்தனர்.

இந்தநிலையில் பிரசாந்தின் காதலிக்கு நேற்று முன்தினம் பிறந்தநாள். இதைத்தொடர்ந்து நண்பர்களுடன் மதுகுடித்துவிட்டு பிரசாந்த் கேக் வாங்கிக்கொண்டு காதலியின் வீட்டு சுவர் ஏறி குதித்து நள்ளிரவில் கதவை தட்டியுள்ளார். பின்னர் அவர், தனதுகாதலியை அனுப்பி வைக்குமாறு வற்புறுத்தி உள்ளார்.

அப்போது வீட்டில் காதலி, அவருடைய தந்தை மகாதேவன், தாய் மாமன் விக்னேஷ் ஆகியோர் இருந்துள்ளனர். வெளியே போகுமாறு வற்புறுத்தியும் பிரசாந்த் செல்ல மறுத்து தகராறு செய்ததால், ஆத்திரம் அடைந்த தாய் மாமன் விக்னேஷ், அரிவாளால் வெட்டியதாக தெரிகிறது. இதில் பலத்த காயம் அடைந்த பிரசாந்தை நண்பர்கள் மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் ஏற்றிச்சென்றுள்ளனர். பெட்ரோல் தீர்ந்ததால் நடுவழியில் மோட்டார் சைக்கிள் நின்றது. இதைத்தொடர்ந்து ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து வரவழைத்து அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர்கள் பிரசாந்த் ஏற்கனவே இறந்துபோனதாக தெரிவித்தனர். இதுகுறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாய் மாமன் விக்னேசை கைது செய்தனர். தந்தை மகாதேவனை போலீசார் விசாரணைக்கு பின் விடுவித்தனர்.

தற்கொலை முயற்சி

காதலன் கொல்லப்பட்டதால், இளம் பெண் மனவருத்தத்தில் இருந்தார். நேற்று காலை வீட்டில் சாணிபவுடரை கரைத்து குடித்து மயங்கி விழுந்தார். உடனே அவரை கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்கொலை முயற்சி சம்பவம் பற்றிய தகவல் அறிந்த செட்டிப்பாளையம் போலீசார் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காதலன் கொல்லப்பட்ட நிலையில், காதலி தற்கொலை முயற்சி சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்