இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
கணவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் காதல் திருமணம் செய்து கொண்ட இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.;
காந்திமாநகர்
கணவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் காதல் திருமணம் செய்து கொண்ட இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
காதல் திருமணம்
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள செக்குமேடு பகுதியை சேர்ந்தவர் இம்மானுவேல் (வயது 27), கார் டிரைவர். இவருக்கும் அதேப்பகுதியை சேர்ந்த பவித்ரா (24) என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் கடந்த 2018-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் 2 பேரும் கோவை காந்திமாநகரில் உள்ள குற்றப்பிரிவு போலீஸ் நிலையம் அருகே வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகனும், 2 வயதில் ஒரு மகளும் உள்ளனர். டிரைவரான இம்மானுவேல் கார் மற்றும் மினிலாரியையும் ஓட்டி வந்தார்.
விஷம் குடித்தார்
இந்த நிலையில் அவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதாக தெரிகிறது. இதனால் அவர் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து பவித்ராவிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பவித்ரா கடும் மனஉளைச்சலில் இருந்து உள்ளார்.
இதற்கிடையே கடந்த 5-ந் தேதி இம்மானுவேல் வேலைக்கு சென்றுவிட்டார். பின்னர் அவர் வீடு திரும்பியபோது பவித்ரா வாந்தி எடுத்தார். உடனே ஏன் வாந்தி எடுக்கிறாய் என்று இம்மானுவேல் கேட்டதற்கு விஷம் குடித்துவிட்டதாக மனைவி தெரிவித்தார்.
பரிதாப சாவு
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனே பவித்ராவை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக வேறு ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த பவித்ராவின் பெற்றோர் கோவை விரைந்து வந்து, அவரை கிருஷ்ணகிரியில உள்ள வேறு ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி பவித்ரா நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆர்.டி.ஓ. விசாரணை
இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தற்கொலை செய்து கொண்ட பவித்ராவுக்கு திருமணம் முடிந்து 5 ஆண்டுகளே ஆவதால் அவருடைய சாவு குறித்து கோவை ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்தி வருகிறார்.