"நீட் இல்லாமல் சிறப்பாக படிப்பை முடித்து சிறந்தவர்கள் என நிரூபித்து விட்டீர்கள்" -அமைச்சர் பேச்சு

2016-ம் ஆண்டு மருத்துவப்படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு படிப்பை நிறைவு செய்ததற்கான பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‘நீட்' இல்லாமல் சிறப்பாக படிப்பை நிறைவு செய்து சிறந்தவர்கள் என நிரூபித்துவிட்டீர்கள் என்று பேசினார்.;

Update: 2022-06-02 23:13 GMT

சென்னை,

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு 'நீட்' தேர்வு மதிப்பெண் அவசியம் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, 2016-ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்துக்கு மட்டும் அந்த ஆண்டில் விலக்கு பெறப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டில் (2017) இருந்து நீட் தேர்வு மதிப்பெண்ணை கொண்டே தற்போது வரை தமிழ்நாட்டில் மாணவர் சேர்க்கை நடக்கிறது.

அந்த வகையில், 2016-ம் ஆண்டு நீட் தேர்வு மதிப்பெண் இல்லாமல், 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவர்களின் படிப்பு நிறைவு விழா, அவர்களுக்கு பட்டமளிப்பு விழா சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நூற்றாண்டு அரங்கத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் மருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு, சென்னை மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் தேரணிராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் 70 மருத்துவக்கல்லூரிகள்

விழாவில், 2016-ம் ஆண்டு மருத்துவப் படிப்பில் சேர்ந்து படிப்பை நிறைவு செய்த மாணவ-மாணவிகளுக்கு பட்டம் மற்றும் சான்றிதழ், படிப்பில் சிறந்த மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. இதில் பிரசாந்த் என்ற மாணவர் அனைத்து வகையிலும் சிறந்த மாணவர் என்ற அடிப்படையில், மொத்தமாக வழங்கப்பட்ட 42 பதக்கங்களில், 36 பதக்கங்களை அந்த மாணவரே தட்டிச்சென்றார். அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாணவனின் தாயாரை மேடைக்கு அழைத்து, மகனுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ் வழங்க வாய்ப்பு கொடுத்தார்.

முன்னதாக இந்த விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-

இந்தியாவில் உள்ள 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 578 மருத்துவக்கல்லூரிகள் இருக்கின்றன. இதில் 36 அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்பட 70 மருத்துவக்கல்லூரிகள் தமிழ்நாட்டில் மட்டும் இருக்கிறது. உலகில் மிகச்சிறந்த மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலில் முதல் 100 இடத்தில் 60-வது இடத்தில் சென்னை மருத்துவக் கல்லூரி உள்ளது. இந்த மருத்துவக் கல்லூரிக்கு ஏராளமான சிறப்பு அம்சங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் மிகவிரைவில் உலகில் மிகச்சிறந்த மருத்துவக் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலில் ஓரிலக்கத்துக்கு வரும் வகையில் கல்லூரி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.

படாதபாடு படுத்தும் 'நீட்'

இப்போது பட்டம் பெறும் மாணவர்களின் பெற்றோராகிய நீங்கள், இவர்களை பெற்றபோது உங்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியைவிட, டாக்டராக பட்டம் பெறுகிறதை பார்க்கும் மகிழ்ச்சி 100 மடங்கு அதிகம் என்பதை நான் உணர்வேன்.

கொரோனாவைத் தொடர்ந்து தற்போது குரங்கு அம்மை ஒன்று உலகம் முழுவதும் பரவி வருகிறது. என்ன பாதிப்பை ஏற்படுத்துமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. தொற்று நோய் அல்ல என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இக்கட்டான காலகட்டத்தில் மக்களை காப்பதற்கான தகுதியான நபர்களாக நீங்கள் (படிப்பை முடித்த மாணவர்கள்) பொறுப்பு ஏற்றிருக்கிறீர்கள்.

இப்போது படிப்பை முடித்து இருக்கும் உங்களுக்கு ஒரு சிறப்பு தகுதி என்னவென்றால், நீங்கள் அனைவரும் நீட் இல்லாமல் நீட்டாக படித்து வந்துள்ளீர்கள். நீட் தேர்வு வருவதற்கு முன்பாக மருத்துவப்படிப்பில் சேர்ந்துள்ளீர்கள். நீட் தற்போது படாதபாடு படுத்துகிறது. நீட் மட்டும்தான் ஒரு தகுதியான மாணவர்களை உருவாக்கும் என பலரும் முழங்கிக்கொண்டிருக்கிறார்கள். நீட் இல்லாவிட்டாலும், நாங்கள் அனைவரும் சிறந்தவர்கள் என நிரூபித்துவிட்டீர்கள். உங்களுக்கு பாராட்டுக்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்