மனம் தளராமல் செயல்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும்
எந்தவொரு சூழ்நிலையிலும் மனம் தளராமல் செயல்பட்டால் மட்டுமே லட்சிய குறிக்கோளை அடைந்து வெற்றி பெற முடியும் என்று மாணவர்களுக்கு கலெக்டர் மோகன் அறிவுரை கூறினார்.;
கலந்துரையாடல் நிகழ்ச்சி
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ- மாணவிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கி மாணவ- மாணவிகளின் கருத்துகள் மற்றும் லட்சியங்களை கேட்டறிந்தார். அதன் பின்னர் அவர் பேசியதாவது:-
ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட திறமைகள் உள்ளது. இதனை சரியாக அறிந்துகொண்டு பயன்படுத்தினால் வாழ்க்கையிலும், பொருளாதாரத்திலும் தோல்வி என்பதே நமக்கு கிடையாது. ஆகவே ஒவ்வொருவரும் தனக்குள் இருக்கும் தனித்திறமையை முதலில் கண்டுணர்ந்து அதனை செயல்படுத்துவதில் நாட்டம் காண வேண்டும்.
விடாமுயற்சி, கடின உழைப்பு
வாழ்வில் தோல்வியை சந்திக்கின்ற ஒவ்வொருவரும் தங்களுடைய தோல்வியை ஏற்றுக்கொண்டு அதனை சரிசெய்திடும் மனநிலைக்கு வந்துவிட்டால் அவர்களுக்கு வெற்றி நிச்சயம். அதுபோலதான், படிக்கும்போது மதிப்பெண் அல்லது வேலைவாய்ப்பில் தோல்வி ஏற்பட்டால் எதனால் இத்தோல்வி ஏற்பட்டது, அதனை சரிசெய்வதற்கான வழிமுறைகள் என்னவென்று தெரிந்து செயல்பட்டால் ஒவ்வொருவரும் இச்சமூகத்தில் வெற்றியாளரே.
பொருளாதாரத்தில் பின்தங்கிய அதிகப்படியான நபர்கள் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றி முழுமுயற்சியுடன் செயல்பட்டு அதிலும் வெற்றி பெற்று தங்கள் லட்சியத்தை அடைந்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்கள். இவ்வாறு வெற்றி பெறுவதற்கு காரணம் விடாமுயற்சியும், கடின உழைப்பும் என்பதை அனைவரும் நன்கு உணர வேண்டும்.
லட்சிய குறிக்கோள்
எந்தவொரு சூழ்நிலையிலும் மனம் தளராமல் செயல்படுபவர்களால் மட்டுமே லட்சிய குறிக்கோளை அடைந்து வெற்றியாளர்களாக விளங்குவார்கள். எனவே இக்கட்டான சூழ்நிலை இருந்தாலும், வறுமை இருந்தாலும்கூட மனம் தளராமல் தாங்கள் மேற்கொண்ட லட்சியத்தை அடைய தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி பெற்று சாதனையாளர்களாக வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் அறிஞர் அண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் சிவக்குமார், துணை முதல்வர் ரவி மற்றும் மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர்.