தமிழக அரசு நடத்தும் குடிமை பணி தேர்வு பயிற்சி மையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசு நடத்தும் குடிமை பணி தேர்வு பயிற்சி மையத்தில் சேர விரும்புபவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தலைமைச்செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார்.

Update: 2023-06-14 18:54 GMT

சென்னை,

தமிழ்நாடு அரசால் நிர்வகிக்கப்படும் அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில், மத்திய தேர்வாணையத்தால் நடத்தப்படும், அகில இந்திய குடிமை பணிகளுக்கான தேர்வுகளை (சிவில் சர்வீசஸ் தேர்வு) எதிர்கொள்ளும் ஆர்வலர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

சிறந்த பயிற்றுனர்களை கொண்டு பயிற்சி அளிப்பதுடன், ஆர்வலர்கள் தங்களை தேர்வுக்கு தயார்ப்படுத்திக்கொள்ளும் வகையில் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படுகின்றன.

31 பேர் தேர்ச்சி

கடந்த மாதம் 28-ந்தேதியன்று நடைபெற்ற குடிமைப்பணி முதல்நிலை தேர்வில், இங்கு பயிற்சி பெற்ற 31 பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். இவர்களில் 7 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் 5-ந்தேதி முதல் கடந்த 28-ந்தேதி வரை உண்டி உறைவிடத்துடன் கூடிய அறைகள் வழங்கப்பட்டு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.

முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளளவர்களுக்கு ஜூன் (இந்த மாதம்) முதல் வருகிற செப்டம்பர் மாதம் வரை 3 மாதங்களுக்கு முதன்மை தேர்வு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

சேர்க்கை

அகில இந்திய குடிமை பணி தேர்வு பயிற்சி மையத்தில் சேர விரும்பும் ஆர்வலர்கள் 15-ந்தேதி (இன்று) காலை 10 மணி முதல் 17-ந்தேதி (நாளை மறுதினம்) மாலை 6 மணி வரையில் www.civilservicecoaching.com என்ற இணையத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்யலாம். இட ஒதுக்கீட்டின்படி தேர்வு செய்யப்பட்ட ஆர்வலர்கள் விவரம் 18-ந்தேதி இணையத்தில் வெளியிடப்பட்டு, 19-ந்தேதி மற்றும் 20-ந்தேதி ஆகிய 2 நாட்களில் சேர்க்கை நடைபெறுவதோடு 21-ந்தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும்.

225 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, தங்கும் வசதிகளுடன் குடிமைப்பணி முதன்மை தேர்வுக்கு பயிற்சியளிக்கப்பட உள்ளார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்