குரூப்-1 நேர்முகத்தேர்வு இலவச பயிற்சிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் -சைதை துரைசாமி அறிவிப்பு
சைதை துரைசாமியின் மனிதநேய பயிற்சி மையத்தில் படித்து முதன்மைத்தேர்வு எழுதியவர்களில் 9 பேர் வெற்றி பெற்றுள்ளனர். தொடர்ந்து நேர்முகத்தேர்வு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியை தலைமையாக கொண்டு மனிதநேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம் செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி மையத்தில் தமிழகத்தை சேர்ந்த அனைத்து தரப்பு மாணவ-மாணவிகளும் இந்திய அளவில் உயர் பதவிகளான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்றவற்றிற்கு தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு பயிற்சி அளிக்கிறது.
அந்தவகையில் கடந்த 14 ஆண்டுகளில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.ஆர்.எஸ்., இந்திய வனத்துறை பணி ஆகிய பதவிகளிலும், டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் குரூப்-1, 2, 2ஏ, சப்-இன்ஸ்பெக்டர், உதவி என்ஜினீயர், பஞ்சாயத்துராஜ், பொதுப்பணித்துறையில் உள்ள பதவிகளிலும் இதுவரை 3 ஆயிரத்து 612 பேர் வெற்றி பெற்று மாநில மற்றும் தேசிய அளவில் பல்வேறு உயர் பதவிகளில் இருக்கின்றனர்.
அந்த வரிசையில் குரூப்-1 பதவிகளுக்கு நடந்த முதல் நிலைத்தேர்வு, முதன்மைத்தேர்வுகளுக்கு மனிதநேய பயிற்சி மையம் பயிற்சி வழங்கியது. இதில் முதன்மைத்தேர்வு முடிவு நேற்று முன்தினம் வெளியான நிலையில், மனிதநேய பயிற்சி மையத்தில் படித்த 9 பேர் அதில் வெற்றி பெற்றிருக்கின்றனர்.
நேர்முகத்தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
முதன்மைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் நேர்முகத்தேர்வுக்கான பயிற்சி, மனிதநேய இலவச பயிற்சி மையத்தில் இலவசமாக நடத்தப்பட உள்ளது.
இதில் கலந்து கொள்ள விரும்பும் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் சமீபத்தில் எடுக்கப்பட்ட தங்களுடைய பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் முதன்மைத்தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஆகியவற்றுடன் 1.7.2022 (இன்று) முதல், சென்னை சி.ஐ.டி.நகரில் உள்ள மனிதநேயம் பயிற்சி மையத்தில் நேரிலோ, 044-24358373, 24330095, 8428431107 என்ற தொலைபேசி, செல்போன் எண் மூலமாகவோ, manidhanaeyam@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம். நேர்முகத்தேர்வுக்கான பயிற்சி 2-ந்தேதி (நாளை) முதல் அளிக்கப்படுகிறது.
மேற்கண்ட தகவலை மனிதநேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.