ரேஷன் கடைகளில் இலவசமாக மஞ்சப்பை வழங்க வேண்டும்
ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு இலவசமாக மஞ்சப்பை வழங்க வேண்டும் என்று தொழில்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.;
சுல்தான்பேட்டை
ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு இலவசமாக மஞ்சப்பை வழங்க வேண்டும் என்று தொழில்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
மீண்டும் மஞ்சப்பை
பிளாஸ்டிக்கை தடுக்கும் வகையில், தமிழகத்தில் மீண்டும் மஞ்சப்பை என்ற திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு அறிவித்தார். பிளாஸ்டிக்கை தவிர்த்து துணிப்பைகளின் உபயோகத்தை பொதுமக்களிடம் மீண்டும் கொண்டுவர விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கம் ஆகும்.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகின்றன. இவற்றுடன் முதல்-அமைச்சர் அறிவித்த மஞ்சப்பை திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ரேஷன்கடைகளில் இலவசமாக வழங்க வேண்டும்
இதுகுறித்து தொழில்துறையினர் கூறியதாவது:-
மனிதர்கள், விலங்குகள் மற்றும் மண்வளத்திற்கு தீங்கு விளைவிக்கும் பல்வேறு வகையான பிளாஸ்டிக் பொருட்கள் தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. தடை விதிப்பிற்கு பின்பும் இவற்றின் பயன்பாடு புழக்கத்தில் இருந்து இன்னும் மறையவில்லை. துணிப்பைகளில் பயன்பாடு அதிகரித்தால் பிளாஸ்டிக் பயன்பாடு தானாகவே குறைந்துவிடும். இதற்கு தமிழக அரசு அறிவித்த மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும்.
இதன்படி ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கும் பொதுமக்களுக்கு இலவசமாக துணிப்பைகள் (மஞ்சப்பை) வழங்குவதன் மூலம் இவற்றின் பயன்பாடு அதிகரிக்கும். மேலும், துணி உற்பத்தி சார்ந்த நெசவாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் இதன் மூலம் கூடுதல் பயன் பெறுவர். எனவே, தமிழக அரசு ரேஷன் கடைகளில் இலவசமாக மஞ்சப்பை வழங்க விரைந்து நடவடிக்கை வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.