நீர் நிலைகளை பாழாக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை
நீர் நிலைகளை பாழாக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை;
போடிப்பட்டி
நீர் நிலைகளைப் பாழாக்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரிய குளம்
நீரின்றி அமையாது உலகு என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.ஆனாலும் மழைநீரை சேமிப்பதிலும், நீர் நிலைகளைப் பாதுகாப்பதிலும் தொடர்ந்து அலட்சியப் போக்கு நிலவி வருகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
நீர் நிலைகள் என்பவை ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் பெரிய அளவிலான குப்பைத் தொட்டி என்பது போன்ற அலட்சிய போக்கு பலரிடம் இருக்கிறது. உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளிலுள்ள பெரும்பாலான நீர் நிலைகளில் கட்டிட கழிவுகள், இறைச்சி கழிவுகள், விவசாய கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.இதனால் நீர் வழித்தடங்கள் அடைபட்டு பெருமளவு நீர் வீணாகிறது. அத்துடன் இறைச்சிக் கழிவுகளால் தண்ணீர் பாழாவதுடன் பல்வேறு சுகாதார சீர்கேடுகளுக்கும் காரணமாகிறது.
அந்தவகையில் ஏழு குளப்பாசன குளங்களில் ஒன்றான உடுமலை பெரிய குளம் தற்போது பராமரிப்பில்லாமல் புதர் மண்டிக் கிடக்கிறது. இதனால் நீர்தேக்கப் பரப்பு குறைவதுடன் பாசனத்துக்கு நீர் எடுப்பதிலும் இடையூறுகள் ஏற்படுகிறது.மேலும் குளத்தின் கரைகள் உரிய பராமரிப்பில்லாமல் புதர் மண்டிக் கிடப்பதால் கரைகள் சேதமடையும் அபாயம் உள்ளது. அத்துடன் குளக்கரையை திறந்த வெளி பாராகவும் கழிப்பிடமாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.மேலும் கரைகளில் மட்டுமல்லாமல் நீரிலும் கோழிக் கழிவுகளை வீசியுள்ளனர்.இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் தண்ணீரில் புழுக்கள் உற்பத்தியாகி நோய் பரப்பும் சூழல் உள்ளது.
கடும் நடவடிக்கை
அத்துடன் குளத்திலிருந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறந்து விடும் மடை பகுதியில் கோழிக் கழிவுகள் பெருமளவில் தேங்கிக் கிடக்கிறது. இதனால் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் போது இறைச்சிக் கழிவுகள் விளை நிலத்தில் சென்று விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நிலை உள்ளது.எனவே இதுபோல நீர் நிலைகளை பாழாக்குபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.அத்துடன் கோழி, மீன், இறைச்சி போன்ற மாமிசக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல் பொது வெளிகளிலும் நீர் நிலைகளிலும் வீசுபவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும். மேலும் நீர் நிலைகளின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.