6 மையங்களில் போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வு

திண்டுக்கல் மாவட்டத்தில் 2-ம் நிலை போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வு நடக்கிறது. இதில் 11,814 பேர் பங்கேற்று தேர்வு எழுதுகின்றனர்.

Update: 2022-11-26 16:39 GMT

எழுத்து தேர்வு

தமிழ்நாடு சீருடை பணியாளர் குழுமம் சார்பில், 2-ம் நிலை போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் தேர்ச்சி பெறுவோர் போலீஸ், சிறைத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையில் சேர்க்கப்படுவர்.

இந்த எழுத்து தேர்வுக்காக, திண்டுக்கல் மாவட்டத்தில் 6 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., பார்வதீஸ், ஜி.டி.என்., என்.பி.ஆர்., எஸ்.எஸ்.எம். ஆகிய கல்லூரிகள் மற்றும் திண்டுக்கல் திருஇருதய மேல்நிலைப்பள்ளி ஆகிய 6 மையங்களில் தேர்வு நடக்கிறது.

இதில் ஆண்கள் 9741 பேர், பெண்கள் 2072 பேர் மற்றும் திருநங்கை ஒருவர் என மொத்தம் 11,814 பேர் பங்கேற்று தேர்வு எழுதுகின்றனர்.

பலத்த பாதுகாப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் போலீஸ் ஐ.ஜி பாபு, போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் மேற்பார்வையில், ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் தேர்வு எழுத விண்ணப்பித்த அனைவரும் புகைப்படத்துடன் கூடிய நுழைவு சீட்டுடன் வரவேண்டும்.

கருப்பு அல்லது நீலநிற பால்பாயிண்ட் பேனா மூலம் தேர்வு எழுத வேண்டும். தேர்வு காலை 10 மணிக்கு தொடங்குவதையொட்டி, காலை 8.30 மணி முதலே தேர்வர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவர். தாமதமாக வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

செல்போன் மற்றும் கால்குலேட்டர் எடுத்துச்செல்ல அனுமதி இல்லை, முறைகேடுகளில் ஈடுபடுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி திண்டுக்கல் ஆயுதப்படை மைதானத்தில் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தேர்வு குறித்த முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்