போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு

விழுப்புரம் மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது.;

Update: 2022-06-25 17:29 GMT

விழுப்புரம்:

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம், காவல்துறையில் காலியாக உள்ள 444 சார்பு ஆய்வாளர் (தாலுகா மற்றும் ஆயுதப்படை, ஆண், பெண் மற்றும் திருநங்கை) பணிக்கான எழுத்துத்தேர்வை அறிவித்தது. இத்தேர்வானது தமிழகம் முழுவதும் நேற்று 39 தேர்வு மையங்களில் தொடங்கியது. இத்தேர்வை சுமார் 1½ லட்சம் பேர் எழுதினர்.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்துத்தேர்வு விழுப்புரம் ஏழுமலை தொழில்நுட்ப கல்லூரி, அரசு சட்டக்கல்லூரி, விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி, வி.ஆர்.பி. மேல்நிலைப்பள்ளி, ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி, அரசூர் வி.ஆர்.எஸ். பொறியியல் கல்லூரி ஆகிய 6 தேர்வு மையங்களில் நடைபெற்றது.

ஆர்வமுடன் எழுதினர்

சரியாக காலை 10 மணிக்கு எழுத்துத்தேர்வு தொடங்கியது. பொது அறிவுத்தேர்வாக நடந்த இத்தேர்வு பகல் 12.30 மணிக்கு முடிந்தது. இத்தேர்வை எழுத விண்ணப்பித்த 7,510 பேரில் 6,356 பேர் ஆர்வமுடன் வந்திருந்து தேர்வு எழுதினர். 1,154 பேர் தேர்வு எழுத வரவில்லை.

இதனை தொடர்ந்து மாலை 3.30 மணி முதல் 5.10 மணி வரை தமிழ் மொழிக்கான தகுதித்தேர்வு நடந்தது. இத்தேர்வை எழுத விண்ணப்பித்த 7,730 பேரில் 6,521 பேர் வந்திருந்து ஆர்வமுடன் தேர்வு எழுதினர். 1,209 பேர் தேர்வு எழுத வரவில்லை.

அதிகாரிகள் பார்வையிட்டனர்

தேர்வு நடைபெற்ற மையங்களில் விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தேர்வு மையத்தில் தேர்வர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை, காற்றோட்டமான வசதி மற்றும் தடையில்லா மின்சார வசதி செய்யப்பட்டுள்ளதா என்று பார்வையிட்டனர்.

மேலும் தேர்வில் எவ்வித முறைகேடும் நடைபெறாமல் இருக்கும் வகையில் தேர்வு நடைபெற்ற மையம் மற்றும் தேர்வறைகள் சி.சி.டி.வி. மூலம் கண்காணிக்கப்பட்டது.இத்தேர்வு பணியில் 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 6 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 25 இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 800 போலீசார் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்