கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பை நிறுத்த வேண்டும்; ஆந்திர அரசுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் கோரிக்கை
பூண்டி ஏரி முழுவதும் நிரம்பியதால் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பை நிறுத்த வேண்டும் என ஆந்திர அரசுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
பூண்டி ஏரி
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை - தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளில் மொத்தம் 11.757 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கலாம். இதில் பூண்டி ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின் கீழ் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீர் சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடுவது வழக்கம்.
முழுவதும் நிரம்பியது
கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின் கீழ் நவம்பர் 28-ந் தேதியில் இருந்து கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் கிடு கிடு என உயர்ந்து வந்தது. இந்த ஏரியின் உயரம் 35 அடி ஆகும். நேற்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 35 அடி பதிவாகியது. முழு கொள்ளளவான 3.231 டி.எம்.சி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு கிருஷ்ணா நீர் வினாடிக்கு 480 கன அடி ஆக வந்து கொண்டு இருந்தது. தொடர் மழையால் பூண்டி ஏரியில் இருந்து அதிகபட்சமாக வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வரை உபரி நீர் மதகுகள் வழியாக கொசத்தலை ஆற்றில் திறக்கப்பட்டது. பூண்டி ஏரியிலிருந்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு வினாடிக்கு 550 கன அடி வீதம், மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தற்போது 24 அடியை நெருங்கி உள்ளது. ஏரியின் மொத்த உயரம் 28.80 அடியாாகும். புழல் ஏரியின் மொத்த உயரம் 21.20 அடி. இதில் 19.80 அடிக்கு தண்ணீர் உள்ளது. இதனால் செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகளிலும் வரும் நாட்களில் பூண்டியில் இருந்து அனுப்பப்படும் தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை உள்ளது.
ஆந்திர அரசுக்கு கடிதம்
இதை அடுத்து கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறக்கப்பட்டுள்ள கிருஷ்ணா தண்ணீரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தமிழக பொதுப்பணி அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதி உள்ளனர். எனவே பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறப்பு விரைவில் நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட 5 ஏரிகளிலும் தற்போது மொத்த கொள்ளளவில் 92 சதவீதத்திற்கு மேல் தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.