வேப்ப மரத்திற்கு பூஜை செய்து வழிபாடு
கோபால்பட்டி அருகே உள்ள கே.அய்யாபட்டியில் ஒரு வேப்ப மரத்தை ஜடாமுனீஸ்வரராக பொதுமக்கள் வணங்கி வருகின்றனர்.
கோபால்பட்டி அருகே உள்ள கே.அய்யாபட்டியில் ஒரு வேப்ப மரத்தை ஜடாமுனீஸ்வரராக பொதுமக்கள் வணங்கி வருகின்றனர். அங்கு நாகம்மாள் சுவாமி கோவிலும் உள்ளது. இந்த கோவிலில் நேற்று ஆடி மாத உற்சவ விழா நடந்தது. இதையொட்டி அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் நல்ல மழை பெய்ய வேண்டிஆடு, சேவல்களை காணிக்கையாக வழங்கினர். ஜடாமுனீஸ்வரர் வேப்பமரத்திற்கு சந்தனம் பூசி, மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து பொங்கல் வைத்து ஆடு, கோழிகள் வெட்டப்பட்டு அசைவ உணவு சமைத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ., மாவட்ட கவுன்சிலர் விஜயன், கோம்பைப்பட்டி ஊராட்சி தலைவர் தமிழரசி கார்த்திகைசாமி, ஒன்றிய கவுன்சிலர் ஹரிஹரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.