உலக முதலீட்டாளர்கள் மாநாடு: 2 ஆம் நாள் அமர்வு தொடங்கியது
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஈர்க்கப்பட்ட ஒட்டுமொத்த முதலீட்டு விவரங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை வெளியிடுகிறார்.
சென்னை,
தொழில் வளர்ச்சியை பெருக்கவும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிக்கொடுக்கவும் தமிழகத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2 நாட்கள் நடைபெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது.
இந்த மாநாட்டில் 50 நாடுகளில் இருந்து 450-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், தமிழ்நாட்டின் முன்னணி தொழில் அதிபர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் முதல் நாளிலேயே ரூ.5½ லட்சம் கோடி ஒப்பந்தம் கையெழுத்தாகின.
இந்த நிலையில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் 2 ஆம் நாள் அமர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. மின்சார வாகனம், விவசாயம், உணவுத்துறை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் அமர்வுகள் நடைபெற உள்ளன. மாநாட்டில் சிறு, குறு தொழில் முதலீட்டாளர்கள் சந்திப்பு மதியம் 1 மணிக்கு நடைபெற உள்ளது. இன்று பல கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 300 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன.
மாநாட்டின் இறுதி நிகழ்வில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். மாநாட்டில் ஈர்க்கப்பட்ட ஒட்டுமொத்த முதலீட்டு விவரங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை வெளியிடுகிறார்.