நாகூர் தர்காவில் உலக புகழ் பெற்ற சந்தன கூடு திருவிழா: ஏ.ஆர்.ரகுமான் உட்பட திரளானோர் பங்கேற்பு

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் வைபவம் இன்று அதிகாலை நடைபெற்றது.

Update: 2023-01-03 05:53 GMT

நாகூர்,

நாகூர் ஆண்டவர் என போற்றப்படும் செய்யது சாகுல் ஹமீது பாதுஷாவின் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் கந்தூரி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டுக்கான 466-ம் ஆண்டு கந்தூரிவிழா கடந்த டிசம்பர் மாதம் 24,ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் வைபவம் இன்று அதிகாலை நடைபெற்றது.

ஸ்தூபி இசை, தாரை தப்பட்டை , என விடிய விடிய நடந்த சந்தனக்கூடு ஊர்வலமானது அதிகாலை 4 மணிக்கு நாகூரை வந்தடைந்தது. கால்மாட்டு வாசலில் சந்தன குடங்கள் இறக்கப்பட்டு நாகூர் ஆண்டவர் சமாதியில் பாரம்பரிய முறைப்படி தர்ஹா நிர்வாகிகளில் ஒருவரான கலீபா மஸ்தான் சாஹிப் சந்தனம் பூசினார்.

நிகழ்வில் தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

மேலும், ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.நாகூர்-நாகை சாலையில் சந்தனக்கூடு ஊர்வலம் நடந்ததால் போக்குவரத்து மாற்றி விடப்பட்டது.

இந்த ஊர்வலத்தையொட்டி நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்