வெளி மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம்
வெளி மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.;
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளாதேவி உத்தரவின்படி, வெளி மாநிலங்களில் இருந்து வந்து பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தங்கி பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் நேற்று போலீசார் நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது போலீசார் அவர்களை சந்தித்து அவர்களின் பாதுகாப்பு மற்றும் அச்சுறுத்தல் குறித்து பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தியும், அவர்களுக்கு ஏதேனும் குறைகள் இருக்கிறதா? எனவும் கேட்டறிந்தனர். அப்போது வெளி மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் கூறுகையில், நாங்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் மிகவும் பாதுகாப்பான முறையில் வசித்து கொண்டு பணிபுரிந்து வருகின்றோம் எனவும், எங்களிடம் நாங்கள் வசிக்கும் பகுதியில் இருக்கும் மக்கள் மிகவும் சகோதரத்துவத்துடன் பழகுகின்றார்கள் எனவும், நாங்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறோம், என்றார். இது தொடா்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி கூறுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட வெளிமாநிலத்தினர், மாவட்டத்தில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகள், ஓட்டல்கள், கட்டிட பணிகள் மற்றும் பல இடங்களில் பணிபுரிந்து வருகின்றார்கள். அவர்கள் அனைவரும் அவர்கள் பணிபுரியும் இடங்களில் அல்லது அதற்கு அருகில் உள்ள ஊர்களில் வசித்து வருகின்றார்கள். அவர்கள் அனைவரும் இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 19-ன் படி பெரம்பலூர் மாவட்டத்தில் எந்தவித அச்சமும் இன்றி மிகவும் பாதுகாப்பான முறையில் பணிபுரிந்து வருகின்றார்கள். மேலும் வெளி மாநிலத்தினருக்கு போலீசாரின் சார்பில் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் எப்பொழுது வேண்டுமானாலும் 9498100690 என்ற செல்போன் எண்ணினை தொடர்பு கொள்ளலாம், என்றார்.