மீண்டும் பணி வழங்க கோரி தொழிலாளி தர்ணா
நெல்லியாளம் டேன்டீ தொழிற்சாலையில் மீண்டும் பணி வழங்க கோரி தொழிலாளி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
பந்தலூர்
பந்தலூர் அருகே நெல்லியாளம் டேன்டீ தேயிலை தொழிற்சாலையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தவர் கருணாநிதி (வயது 48). இவர் தொழிற்சாலையில் இருந்து நெல்லியாளம் டேன்டீ தோட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்தநிலையில் தனக்கு தொழிற்சாலையில் மீண்டும் பணி வழங்க கோரி நெல்லியாளம் டேன்டீ தொழிற்சாலை வளாகத்தில் கருணாநிதி அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்த சேரம்பாடி போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இருப்பினும், தொழிலாளியின் கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்க வில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையே தர்ணாவில் ஈடுபட்ட கருணாநிதி திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் பந்தலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.