கறம்பக்குடி பகுதியில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரம்

சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் கறம்பக்குடி பகுதி தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். 2 அடி முதல் 6 அடி வரையிலான சிலைகள் தயாரிக்கப்படுகிறது.

Update: 2022-08-17 18:39 GMT

கறம்பக்குடி:

வினாயகர் சதுர்த்தி

தமிழ்நாட்டில் இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி விழா முக்கியமானதாகும். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை வட மாநிலங்களில் மட்டுமே கொண்டாடப்பட்டு வந்த விநாயகர் சதுர்த்தி விழா கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கிராமங்கள் முதல் பெரும் நகரங்கள் வரை முக்கிய இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்து நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கால் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறவில்லை. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் வருகிற 31-ந்தேதி நடைபெற உள்ள விநாயகர் சதூர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

பல்வேறு வகையான சிலைகள்

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பகுதியில் உள்ள மழையூர், நரங்கியப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். இப்பகுதியில் கலை நுணுக்கத்துடன் நேர்த்தியாக சிலைகள் தயாரிக்கப்படுவதால் இங்கு தயாரிக்கப்படும் சிலைகளுக்கு மவுசு அதிகம்.

இதனால் தமிழகத்தின் பலபகுதிகளில் இருந்தும் விநாயகர் சிலைகளுக்கான ஆர்டர்கள் குவிந்து உள்ளன. வலம்புரி விநாயகர், மங்கள விநாயகர், மணக்குள விநாயகர், சிங்கவாகன விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வகையான சிலைகள் தயாரிக்கப்படுகின்றன.

அரசு உத்தரவுபடி இயற்கையாக முறையில் ரசாயன கலவை கலப்பின்றி சிலைகள் செய்யப்படுகின்றன. விதிகளுக்கு உட்பட்டு 2 அடி முதல் 6 அடி உயரம் வரை மட்டுமே சிலைகள் உருவாக்கப்படுகின்றன.

உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லை

இதுகுறித்து நரங்கியப்பட்டு பகுதியில் விநாயகர் சிலை தயாரிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பெண் தொழிலாளி ஒருவர் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகள் திருவிழாக்கள், பண்டிகைகள் நடைபெறாததால் மண்பாண்ட தொழில் பெரும் நலிவடைந்தது. இதனால் இத்தொழிலில் ஆர்வம் காட்டி வந்த இளைஞர்கள் போதிய வருமானம் இல்லாததால் வெளிநாடுகளுக்கு சென்று விட்டனர்.

தற்போது விநாயகர் சிலைகளுக்கான ஆர்டர்கள் வர தொடங்கி உள்ளன. உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லை என்றாலும் ஆன்மிக பணியாக செய்து வருகிறோம் என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்