சொத்து தகராறில் தொழிலாளி குத்திக்கொலை

பூதப்பாண்டி அருகே ெசாத்து தகராறில் ெதாழிலாளி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். அவர் கீழே விழுந்ததாக நாடகமாடிய தம்பியை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-11-30 18:45 GMT

பூதப்பாண்டி:

பூதப்பாண்டி அருகே ெசாத்து தகராறில் ெதாழிலாளி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். அவர் கீழே விழுந்ததாக நாடகமாடிய தம்பியை போலீசார் கைது செய்தனர்.

கூலி தொழிலாளி

பூதப்பாண்டியை அடுத்த ஜோசப்காலனியை சேர்ந்தவர் ஏசு தாஸ் (வயது60). இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகன் ஜார்ஜ் எடிசன் (42), கூலி தொழிலாளி. இவருக்கு பெல்லா என்ற மனைவியும், 9-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக பெல்லா கணவரை விட்டு பிரிந்து தனது மகளுடன் தனியாக வசித்து வருகிறார்.

இதனால் ஜார்ஜ் எடிசன் தனது தந்தை மற்றும் தம்பிகளுடன் ஒன்றாக வசித்து வந்தார். இவரது தம்பியான மார்ட்டின் ஜெயராஜ் (40) என்பவரும் மனைவியை பிரிந்து வாழ்கிறார்.

இந்த நிலையில் ஜார்ஜ் எடிசன் வெளிநாட்டில் வேலை பார்த்தபோது சம்பாதித்த பணத்தில் தனது தந்தை பெயரில் புளியன்குளம் பகுதியில் சொத்து வாங்கியதாக கூறப்படுகிறது. தற்போது அதில் வீடு கட்டி வருகிறார்.

மது போதையில் தகராறு

ஆனால் இந்த சொத்தில் தனக்கும் பங்கு தரவேண்டும் என மார்ட்டின் ஜெயராஜ் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஜார்ஜ் எடிசனும், மார்ட்டின் ஜெயராஜும் வீட்டில் ஒன்றாக அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் இடையே சொத்து தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் ஜார்ஜ் எடிசன் தனது தம்பியை தாக்கியதாக தெரிகிறது.

உடனே ஆத்திரமடைந்த மார்ட்டின் ஜெயராஜ் கத்தியால் அண்ணன் ஜார்ஜ் எடிசனின் மார்பு பகுதியில் குத்தியுள்ளார். இதனால் ஜார்ஜ் எடிசன் சுயநினைவை இழந்து கீழே விழுந்தார்.

நாடகமாடினார்

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மார்ட்டின் ஜெயராஜ் தனது நண்பர் குமாருடன் சேர்ந்து அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். டாக்டர்கள் விசாரித்த போது தனது அண்ணன் கீழே விழுந்ததில் அடிபட்டதாக கூறி நாடகமாடினார்.

ஆனால், ஜார்ஜ் எடிசனை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது உடலில் கத்திக்குத்து காயம் இருந்ததை கண்டு சந்தேகம் அடைந்தனர். இதற்கிடையே சிறிது நேரத்தில் ஜார்ஜ் எடிசன் பரிதாபமாக உயிரிழந்தார்.

தம்பி கைது

இதுகுறித்து போலீசுக்கு தகவல் ெகாடுக்கப்பட்டது. பூதப்பாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கோபி, நாகர்கோவில் போலீஸ் துணை சூப்பிரண்டு நவீன் குமார் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து மார்ட்டின் ஜெயராஜ் மற்றும் குமாரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் மார்ட்டின் ஜெயராஜ் தனது அண்ணனை கத்தியால் குத்திக்கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சொத்து தகராறில் அண்ணனை தம்பி குத்தி கொலை செய்த சம்பவம் பூதப்பாண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்