நாகர்கோவில்,
குழித்துறை ரெயில் தண்டவாளம் அருகே நேற்று காலை ஒரு முதியவர் பிணம் காயங்களுடன் கிடந்தது. இதை பார்த்த அந்த பகுதி மக்கள் உடனே நாகர்கோவில் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் பிணமாக கிடந்தவர் மார்த்தாண்டம் கண்ணன் கோடு பகுதியை சேர்ந்த ஞானதாஸ் (வயது 69) என்பது தெரியவந்தது.
தொழிலாளியான இவர் தினமும் காலை குழித்துறை ரெயில் தண்டவாளத்தை கடந்து டீ கடைக்கு செல்வது வழக்கம். இதே போல நேற்று காலையும் டீ குடிப்பதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார்.
அந்த சமயத்தில் ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது மதுரையில் இருந்து புனலூர் நோக்கி சென்ற ரெயில் எதிர்பாராத விதமாக ஞானதாஸ் மீது மோதியதாகவும், இதில் அவர் அதே இடத்திலேயே இறந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.