திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி சாவு
திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.;
திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் கிராமம் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் லட்சுமிபதி (வயது 60). கூலித்தொழிலாளி. கடந்த சில மாதங்களாக லட்சுமிபதி தனது குடும்பத்தினருடன் மணவாள நகரில் உள்ள தனது உறவினர் வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் லட்சுமிபதி தனது மகன் புவனேஷ் (வயது 27) என்பவருடன் பேரம்பாக்கத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை புவனேஷ் ஓட்டினார். லட்சுமிபதி பின்னால் அமர்ந்து வந்தார். அவர்கள் திருவள்ளூரை அடுத்த அதிகத்தூர் சாலையில் வந்து கொண்டிருந்தபோது திடீரென சாலையின் குறுக்கே நாய் ஒன்று வந்தது.
இதனால் நிலைதடுமாறி போன புவனேஷ் திடீரென பிரேக் பிடித்தார். இதனால் தந்தை, மகன் இருவரும் நிலைதடுமாறி சாலையில் விழுந்தனர்.
இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அங்கு இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் லட்சுமிபதியை மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக இறந்து போனார்.
திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் புவனேஷ் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கடம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.