அரசு பஸ் மோதி தொழிலாளி பலி
திண்டுக்கல் நாகல்நகர் மேம்பாலத்தில், அரசு பஸ் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
திண்டுக்கல்லை அடுத்த பொன்னகரத்தை சேர்ந்தவர் மகேஷ்பிரபு (வயது 40). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் மகேஷ்பிரபு, திண்டுக்கல்லில் இருந்து பொன்னகரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். நாகல்நகர் மேம்பாலத்தில் அவர் வந்தபோது, எதிரே வந்த அரசு பஸ் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், படுகாயம் அடைந்த மகேஷ்பிரபுவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுப்பி வைத்தனர். அங்கிருந்து அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே மகேஷ்பிரபு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான மகேஷ்பிரபுவுக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.