மின்வேலியில் சிக்கி தொழிலாளி சாவு

ராஜபாளையம் அருகே மின்வேலியில் சிக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-05-21 19:48 GMT

ராஜபாளையம்

ராஜபாளையம் அருகே மின்வேலியில் சிக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

தொழிலாளி பலி

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கணபதி சுந்தர நாச்சியார்புரத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 36). கூலித்தொழிலாளி. இவருக்கு சொந்தமான மாடுகளை மேய்த்து வந்தார்.

அப்போது இரவில் வீட்டுக்கு செல்லும்போது 3 மாடுகளை காணவில்லை என கூறப்படுகிறது. எனவே தனது நண்பர்கள் சிலரை அழைத்துக் கொண்டு மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள தோப்புகளில் மாடுகளை தேடியதாக தெரிகிறது. அப்போது ராஜபாளையம் நகராட்சி பின்புறம் அமைந்துள்ள தோப்புக்குள் சென்ற போது, வன விலங்குகளை கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி அந்த இடத்திலேயே மாரியப்பன் இறந்ததாக கூறப்படுகிறது.

வாக்குவாதம்

இதுகுறித்து தகவல் அறிந்த மாரியப்பனின் உறவினர்கள் மின்வேலி அமைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அவர்களிடம் வடக்கு போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், மாரியப்பனின் உறவினர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனை அடுத்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறினர். இதையடுத்து மாரியப்பனின் உடலை போலீசார் மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்