வாலாஜாபாத்தில் குடிசை தீப்பிடித்து தொழிலாளி சாவு
வாலாஜாபாத்தில் குடிசை தீப்பிடித்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.;
கூலித்தொழிலாளி
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா திம்மராஜம்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட சீயமங்கலம் காலனி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 38). கூலித்தொழிலாளி. குடிசையில் வசித்து வந்தார். இவருக்கு சரிதா (33) என்ற மனைவியும், ராகுல் (14) என்ற மகனும், விஷாலி (9) என்ற மகளும் உள்ளனர். இவரது குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்த நிலையில் வெங்கடேசன் தனது நண்பர் சரவணன் (37) என்பவருடன் குடிசையில் தங்கி இருந்தார்.
நண்பர்கள் இருவரும் தூங்கி கொண்டிருந்த நிலையில் நள்ளிரவு நேரத்தில் குடிசை திடீரென தீப்பற்றி எரிந்தது. தூக்கத்தில் இருந்த நண்பர்கள் விழித்து கொள்வதற்குள் தீ மளமளவென பரவியதை தொடர்ந்து இருவரும் தீயில் சிக்கி கொண்டனர்.
தீயில் கருகி சாவு
இதில் சரவணன் படுகாயத்துடன் அலறி கொண்டு வெளியே ஓடி வந்து விட்டார். அதற்குள் குடிசை முழுவதும் தீ மளமளவென பரவிய நிலையில் வெங்கடேசன் வீட்டின் உள்ளேயே சிக்கி வெளியே வரமுடியாமல் பரிதாபமாக தீயில் கருகி இறந்தார்.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்து காஞ்சீபுரம் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் ஆர்நிஷா பிரியதர்ஷினி தலைமையில் காஞ்சீபுரம் தீயணைப்புத் துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்து அங்கு இருந்த கியாஸ் சிலிண்டரை பத்திரமாக அப்புறப்படுத்தினார்கள்.
வெங்கடேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வாலாஜாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.