மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலி

மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலி

Update: 2023-06-27 21:59 GMT

தக்கலை:

தக்கலை அருகே உள்ள குழிக்கோடு பகுதியை சேர்ந்த அமல்ராஜ் (வயது40), கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு கல்லுவிளை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, கூட்டமாவு பகுதியை சேர்ந்த ரவிச்சந்திர ஜோண்ஸ் (60) என்பவர் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் அமல்ராஜ் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் திடீரென நிலைதடுமாறி ரவிச்சந்திர ஜோண்ஸ் மீது மோதியது. இதில் அவர்கள் இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். அவர்களில் அமல்ராஜுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

விபத்து நடந்ததும் அருகில் நின்ற பொதுமக்கள் அங்கு கூடினர். அவர்கள் படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ரவிச்சந்திர ஜோண்ஸ் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கும், அமல்ராஜ் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

அமல்ராஜ் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த ரவிச்சந்திர ஜோண்சுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் இறந்த அமல்ராஜுக்கு மனைவி உண்டு, குழந்தை இல்லை. சாலையில் நடந்து சென்ற முதியவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்