பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அடுத்துள்ள அனுக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் துரை (வயது 45), தொழிலாளி. இவர் அதே ஊரை சேர்ந்த தனது நண்பரான பன்னீர்செல்வத்துடன் (41) வாலிகண்டபுரத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதனால் பீதியடைந்த டிரைவர் வாகனத்தை நிறுத்தாமல் அங்கிருந்து தப்பி சென்றார்.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த துரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து படுகாயம் அடைந்த பன்னீர்செல்வத்தை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.