தீயில் கருகிய தொழிலாளி சாவு

நாமக்கல்லில் தீயில் கருகிய தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2023-02-21 18:47 GMT

நாமக்கல் மஜித்தெருவை சேர்ந்தவர் முபாரக் (வயது45). கூலித்தொழிலாளி. இவருக்கு சொந்தமாக வீடு இல்லை. எனவே பள்ளிவாசல் மற்றும் அதனையொட்டி உள்ள பகுதியில் வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 15-ந் தேதி இரவு பேட்டை பள்ளிவாசல் அருகே உள்ள குடிநீர் தொட்டிக்கு அடியில் சாலையோரமாக முபாரக் படுத்து தூங்கி கொண்டு இருந்தார். நள்ளிரவு 12 மணி அளவில் திடீரென அவரது ஆடையில் தீப்பிடித்து கொண்டதாக கூறப்படுகிறது. அந்த வழியாக சென்றவர்கள் அவரை காப்பாற்றி, நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதையடுத்து நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் அவரிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் முபாரக் குடிபழக்கம் உள்ளவர் என்பதும், மது குடித்து விட்டு பீடி புகைத்தபோது அதில் ஏற்பட்ட தீ முபாரக் ஆடையில் பிடித்து தீ விபத்து ஏற்பட்டு இருப்பதும் தெரியவந்தது. இதற்கிடையே மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த முபாரக் நேற்று சிகிச்சை பலன்இன்றி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்