தொழிலாளி அடித்து கொலை
பண்ருட்டி அருகே தொழிலாளியை அடித்து கொலை செய்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;
பண்ருட்டி,
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கீழக்குப்பம் அய்யனார் கோவில் தெருவில் வசித்து வருபவர் சிதம்பரம் மகன் சக்திவேல் (வயது 42). கூலித் தொழிலாளியான இவருக்கு மலர்கொடி என்கிற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மாலை சக்திவேல், அதே ஊரை சேர்ந்த மாயகிருஷ்ணன் மகன் ஞானவேல் (32), ராமலிங்கம் மகன் ராஜசேகர் (32) ஆகியோருடன் அங்குள்ள ஏரிக்கரையில் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது சக்திவேலுக்கும் ஞானவேலுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது.
அடித்துக் கொலை
இதில் ஆத்திரமடைந்த ஞானவேல் மற்றும் ராஜசேகர் ஆகிய 2 பேரும் சேர்ந்து சக்திவேலை உருட்டுக்கட்டையால் அடித்துவிட்டு, அங்கிருந்து ஓடி விட்டனர். இந்த தாக்குதலில் ரத்த காயங்களுடன் மயங்கி கிடந்த சக்திவேலை அவ்வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சக்திவேல் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் கொலை வழக்குப்பதிவு செய்து, ஞானவேல், ராஜசேகர் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர். குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.