மேல்மருவத்தூர் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்
ஆக்கிரமிப்புகளை அகற்ற 3 நாட்கள் அவகாசம் வழங்கும்படி அதிகாரிகளிடம் மக்கள் முறையிட்டனர்.;
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர், கீழ்மருத்தூர் மற்றும் சோத்துப்பாக்கம் ஆகிய பகுதிகளில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை வரும் 15-ந்தேதிக்குள் அகற்றும்படி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து மேல்மருத்தூரில் உள்ள அடிகளார் திருமண மண்டபம் மற்றும் 13 வீடுகளை அகற்ற அதிகாரிகள் சென்றனர்.
அப்போது 2 நாட்களில் ஆக்கிரமிப்புகளை தாங்களே அகற்றிவிடுவதாக ஆதிபராசக்தி கோவில் நிர்வாகிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். இதையடுத்து சோத்துப்பாக்கம் அருகே திரவுபதி அம்மன் கோவில் குளக்கரை தெருவில் உள்ள 8 வீடுகளை அகற்ற வருவாய்த்துறையினர் ஜே.சி.பி. இயந்திரங்களுடன் சென்றனர்.
அப்போது 3 நாட்கள் அவகாசம் வழங்கும்படி அப்பகுதி மக்கள் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் முறையிட்டனர். இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை தற்காலிகமாக கைவிட்டு அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.