மகளிர் உரிமைத்தொகை: விண்ணப்பம், டோக்கன் வினியோகம் தொடங்கியது..!
சென்னையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்பம், டோக்கன் வினியோகம் தொடங்கியது.;
சென்னை,
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியில் ஒன்றான, குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 கலைஞர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் வருகிற செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாளில் தொடங்கப்பட இருக்கிறது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்தநிலையில், ரேஷன் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும் விண்ணப்பம், டோக்கன் வழங்கும் பணி இன்று தொடங்கியது. சென்னை மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் வீடுகளுக்கே சென்று ரேஷன் கடை ஊழியர்கள் விண்ணப்பம் வழங்கி வருகின்றனர். தமிழகத்தில் 1 கோடி பெண்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 1.5 கோடி விண்ணப்பங்கள் வரும் என தகவல் வெளியாகி உள்ளது.
ரேஷன் கடை ஊழியர்கள் ஒவ்வொரு இடங்களிலும் நடைபெறும் முகாம்களின் நேரம், நாள் ஆகியவற்றை குறிப்பிட்டு இந்த விண்ணப்ப படிவம் மற்றும் டோக்கனை வழங்கி வருகின்றனர். இதற்காக தமிழ்நாடு முழுவதும் இல்லம் தேடி கல்வி பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ரேஷன் கடை ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றுகின்றனர். இதற்காக அவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப பதிவு ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து நாட்களிலும் காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் முகாம் நடைபெறும். தெருக்கள், வார்டு மற்றும் அவற்றுக்கான நாட்கள் குறித்த விவரங்கள் ரேஷன் கடைகளில் தகவல் பலகையாக வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
முகாமுக்கு வரும் விண்ணப்பதாரர்களின் ஆதார் எண் பதியப்பட்டு விரல் ரேகை 'பயோமெட்ரிக்' கருவி மூலம் சரிபார்க்கப்படும். பயனாளிகளின் விரல் ரேகை பதிவு சரியாக அமையவில்லை என்றால், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் வழியாக 'ஓ.டி.பி.' எண் அனுப்பி அதன் மூலம் பதிவு செய்யப்படும். இதற்காக விண்ணப்பத்தை கொண்டு வருபவர் செல்போன் வைத்திருப்பது நல்லது என்றும் தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது.
21 வயது நிரம்பிய பெண்கள் இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், ஒரு ரேஷன் அட்டைக்கு ஒருவர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தெளிவுபடுத்திக்கொள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை 15 மண்டலங்களிலும் தனித்தனியாக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.