பேராசிரியர் அய்க்கண் படைப்புகள் பெண் உரிமைகளுக்கானவை -படத்திறப்பு விழாவில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் புகழாரம்

பேராசிரியர் அய்க்கண் படைப்புகள் பெண் உரிமைகளுக்கானது என படத்திறப்பு விழாவில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசினார்.

Update: 2023-01-23 18:45 GMT

காரைக்குடி,

பேராசிரியர் அய்க்கண் படைப்புகள் பெண் உரிமைகளுக்கானது என படத்திறப்பு விழாவில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசினார்.

படத்திறப்பு விழா

காரைக்குடியைச் சேர்ந்த பேராசிரியர் அய்க்கண் இலக்கிய உலகில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் போற்றப்பட்டவர். இவரது படைப்புகள் தமிழக பள்ளிகள், கல்லூரிகள் மட்டுமல்லாமல் சிங்கப்பூரில் உள்ள அரசு பாடத்திட்ட நூல்களிலும் உள்ளது. உலகெங்கும் உள்ள இலக்கிய கூட்டங்களில் பங்கேற்றதோடு அவ்வாறான இலக்கிய, சமூக அமைப்புகளில் பணியாற்றியவர்.

தமிழக அரசு இவருக்கு தமிழ் செம்மல் விருது, அறிஞர் அண்ணா விருது, கலைமாமணி விருது வழங்கி கவுரவித்துள்ளது. இவரது நினைவாக காரைக்குடி கம்பன் கழகம், புத்தக திருவிழாக்குழு, தமிழ்நாடு வல்லம்பர் சமுதாய சங்கம் ஆகியவற்றின் சார்பில் காரைக்குடி பி.எல்.பி. பேலஸில் கலைமாமணி பேராசிரியர் அய்க்கண் உருவ படத்திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் தலைமை தாங்கினார். தொழிலதிபரும் தமிழ்நாடு வல்லம்பர் சமுதாய தலைவருமான பி.எல்.படிக்காசு வரவேற்றார். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தொடக்க உரையாற்றினார். முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேராசிரியர் அய்க்கண் உருவப்படத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது;-

உயா்ந்த இலக்கியவாதி

பேராசிரியர் அய்க்கண் அமைதியான ஆழமான உயர்ந்த இலக்கியவாதி. எதையும் எதிர்த்து பயிலும் கல்வி கடைசி வரை நம்மோடு இருக்கும் என்பதை அனைவருக்கும் உணர்த்தியவர். அவர் வாழ்க்கையில் வெற்றிக்கு கையாண்ட வழிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். அவர் வழிவந்த அவரது குடும்பத்தினர் விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு புத்தகங்களையே பரிசுகளாக வழங்கியது மகிழ்வை தருகிறது. அரசியல் மேடைகளிலும் இந்த வழிமுறைகளை மற்றவர்கள் பின்பற்றினால் அறிவுசார் வழிதேடல் அதிகரிக்கும். பெண்ணியத்தை மையமாக வைத்துள்ள அவரது படைப்புகள் ஆணாதிக்க சமுதாயத்தில் உள்ள பெண்களின் உரிமைகளை, உள்ளக் கிடங்குகளை வெளிப்படுத்தியது. அதனை படிக்கும் ஆணாதிக்கத்தை சேர்ந்தவர்கள் நிச்சயமாக தங்கள் கருத்துக்களை மாற்றிக் கொள்ள நேரிடும் .அவரது படைப்புகளில் ஏதேனும் ஒரு நீதி போதனையும் அறச்செய்தியும் உறுதியாக இருக்கும் மனிதநேயமிக்க அவரது புகழ் காலமெல்லாம் நிலைத்திருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவா்கள்

விழாவில் காரைக்குடி கம்பன் அறநிலை தலைவர் சக்தி திருநாவுக்கரசு, சிங்கப்பூர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தினகரன், மாங்குடி எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ. சுப துரைராஜ், செல்லப்பன் வித்யா மந்திர் சேர்மன் செல்லப்பன் காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்துத்துரை, காரைக்குடி புத்தகத் திருவிழா குழு தலைவர் முத்து பழனியப்பன் காரைக்குடி தொழில் வணிக கழக தலைவர் சாமிதிராவிட மணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்ச்சியில் மல்லிகா தியாகராஜன், வசந்த்அய்க்கண், நகர்மன்ற துணைத்தலைவர் குணசேகரன், அண்ணா தமிழ்க்கழக நிறுவுனர் தலைவர் கதிர்வேல், நகர்மன்ற உறுப்பினர்கள் மெய்யர், தேவன், ஹரிதாஸ், நாகராஜன் மற்றும் அனைத்துக்கட்சி அரசியல் பிரமுகர்கள் அனைத்து சமூக பிரமுகர்கள், கல்வியாளர்கள் கவிஞர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். அருணாதேவி அய்க்கண் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்