தமிழகத்தில் பிரியங்கா காந்தி தலைமையில் மகளிர் பேரணி; தமிழ்நாடு காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

தமிழகத்தில் பிரியங்கா காந்தி தலைமையில் மாபெரும் மகளிர் பேரணி நடத்துவது என்று தமிழ்நாடு காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.;

Update:2022-12-30 03:02 IST

ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் அடுத்த கட்ட நடிவடிக்கையான 'அரசியல் அமைப்பை பாதுகாக்க கையோடு கை கோர்ப்போம்' என்ற பிரசாரத்தை முன்னெடுத்து செல்வது தொடர்பான மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக தேசிய செயலாளர் ஸ்ரீவெல்ல பிரசாத் கலந்துகொண்டார்.

தமிழ்நாடு காங்கிரஸ் மாநில துணைத்தலைவர்கள் கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி, எம்.பி.க்கள் விஜய் வசந்த், டாக்டர் விஷ்ணு பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர்கள் கே.சிரஞ்சீவி, தளபதி பாஸ்கர், எஸ்.ஏ.வாசு, எம்.எஸ்.காமராஜ், எஸ்.காண்டீபன், பி.வி.தமிழ்செல்வன், மாநில செயலாளர்கள் அடையாறு பாஸ்கர், அகரம் கோபி, கலைப்பிரிவு தலைவர் சந்திரசேகரன், இலக்கிய பிரிவு தலைவர் பி.எஸ்.புத்தன், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், பி.டீக்காராமன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

கையோடு கை கோர்ப்போம்

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. ஆட்சி நிச்சயம் அகற்றப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிற இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டு மகத்தான சாதனை புரிந்து வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை இந்த கூட்டம் நெஞ்சார பாராட்டுகிறது, வாழ்த்துகிறது.

இந்திய ஒற்றுமை பயணம் ஜனவரி 26-ந்தேதி காஷ்மீரில் தேசிய கொடியேற்றி வைத்து நிறைவடைகிறது. அதைத்தொடர்ந்து, அன்று முதல் 'அரசியல் சட்டத்தை பாதுகாப்போம் - கையோடு கை கோர்ப்போம்' என்ற மாபெரும் பிரசார இயக்கத்தை அகில இந்திய தலைமை வகுத்துள்ள செயல்திட்டத்தின்படி மேற்கொள்வது என தீர்மானிக்கப்படுகிறது.

பிரியங்கா தலைமையில் பேரணி

இந்த பிரசாரத்தின் உச்சகட்டமாக பிரியங்கா காந்தி தலைமையில் மாபெரும் மகளிர் பேரணி நடத்துவது என்றும், இந்த பேரணியில் அவர் மகளிர் கொள்கை விளக்க அறிக்கையை வெளியிடுவார் என்றும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. ராகுல்காந்தியின் நடைபயணத்தால் மக்களிடையே ஏற்பட்டுள்ள எழுச்சியை முழுமையாக பயன்படுத்தும் வகையில் செயல்திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றுவது என்றும், அதன் மூலம் மக்கள் விரோத பா.ஜ.க. ஆட்சியை அகற்றுவதற்கான ஆதரவை மக்களிடையே திரட்டுவது என்றும் முடிவு செய்யப்படுகிறது.

மேலும், ஆன்லைன் சூதாட்ட மசோதா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மசோதாக்களை முடக்கி வைத்திருக்கிற தமிழக கவர்னருக்கு எதிராக கடுமையான போராட்டத்தை நடத்த தயாராகுவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்